ஆகர்ண்ய கர்ணாம்ருதம் ஆத்மவந்த:
காதாஸஹஸ்ரம் சடகோப ஸூரே:
மஞ்ஜு ப்ரணாதாம் மணிபாதுகே த்வாம்
தத் ஏக நாமாநம் அநுஸ்மரந்தி
பொருள் – உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆத்மஸ்வரூபம் என்ன என்பதை உணர்ந்தவர்களுக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி மிகவும் இன்பமாக உள்ளது. இது போன்று அவர்களுக்கு நம்பெருமாள் நடக்கும் போது எழும் உனது ஓசையும் இனிமையாக உள்ளது. ஆகவே ஒரே போன்ற சப்தம் உடைய உனக்கு நம்மாழ்வாரின் பெயரையே வைத்தனர்.
விளக்கம் – இந்த உலகில் ஒருவரைப் போன்று மற்றொருவருக்குக் குரல் இருந்தால், ஒருவர் பேசும்போது மற்றவர் வந்துவிட்டார் என நினைப்பார்கள். அது போன்று நீ வரும்போது எழும் நாதம் கேட்ட பலரும், நம்மாழ்வார் வந்துவிட்டதாகவே எண்ணினர். எனவே உன்னையும் அவராகவே பெயரிட்டு அழைத்தனர்.
இவ்விதமாக நீயும் நம்மாழ்வாரும் ஒன்றே என நினைப்பவர்கள் செய்வது என்ன? நம்பெருமாள் ஸஞ்சாரம் செய்யும்போது எழும்பும் உனது ஒலியைக் கேட்டால், திருவாய்மொழியின் ஓசையைக் கேட்டது போன்றே எண்ணுகின்றனர். திருவாய்மொழியின் ஓசையைக் கேட்கும்போது, உனது நாதத்தையே அதில் கேட்கின்றனர்.