2 மணி நேரத்தில் 150 கிமீ கடந்த தாய்ப்பால். போக்க்குவரத்தை ஒழுங்கு செய்த போலீசார்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு அவசரமாக தாய்ப்பால் தேவைப்பட்டதால் 150 கிமீ தூரத்தில் உள்ள நகரத்தில் இருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் தாய்ப்பால் கொண்டு வரப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பிறந்த நிலையிலான பச்சிளங் குழந்தைகளுக்கு அவசரமாக தாய்ப்பால் தேவைப்பட்டது. ஆனால் அஜ்மீர் தாய்ப்பால் காப்பகத்தில் தாய்ப்பால் ஸ்டாக் இல்லாததால் பில்வாரா தாய்ப்பால் மையத்தில் இருந்து அஜ்மீருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, 62 லிட்டர் தாய்ப்பால் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வசதி கொண்ட குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் ஒன்று மூலம் பில்வாராவில் இருந்து அஜ்மீருக்கு புறப்பட்டது.
இவ்விரு நகரங்களுக்கு இடையிலான 150 கி.மீ. தூரத்தை வெறும் 2 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கடந்தது. இந்த அளவிலான குளிர்ச்சாதன வசதி சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்ய முடியும் என்பதால், சிறப்பு சாலை ஏற்பாடு மூலம் அது கொண்டு செல்லப்பட்டது.
இந்தப் போக்குவரத்தில் இடையூறு ஏற்படக்கூடாது என்ற வகையில் சாலைகளிலும் டோல்கேட்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அத்துடன், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் ஆம்புலன்ஸ் கண்காணிக்கப்பட்டுள்ளது.