செப்டம்பர் 20-க்கு பின்னர் ஆட்சியை கலைக்க சித்தராமையா முடிவா?
தமிழகத்திற்கு காவிரி நீரை 10 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் கலவரம் வெடித்தது. குறிப்பாக பெங்களூரில் தமிழர்கள் உடமைகள் தீயிடப்பட்டதோடு தமிழர்கள் மிகக்கொடூரமாக தாக்கப்பட்டனர். இதனிடையே, செப்டம்பர் 17 முதல் 20-ஆம் தேதி வரை கூடுதலாக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே மேலும் பதட்டம் அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். செப்டம்பர் 20க்கு மேலும் தண்ணீர் திறந்துவிடுமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்சியையும் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க முதல்வர் சித்தராமையா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறாது.
செப்டம்பர் 20க்கு மேலும் தண்ணீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் அதைச் செயல்படுத்த என் மனம் ஒப்பாது. அணைகளில் எஞ்சியுள்ள நீரையும் தமிழகத்துக்குத் தந்துவிட்டால், அடுத்த ஆண்டு ஜூன் வரை பெங்களூரு, மைசூரு, மண்டியா மாவட்டங்களுக்கு குடிநீர் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. அப்போது மக்கள் நமது அரசை வசை பாடுவார்கள். காங்கிரஸ் அரசின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், இது பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துவிடும். மக்களின் சாபத்துக்கு ஆளாகி, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதைக் காட்டிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறந்தள்ளவே விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு மாநில காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்துவிட்டு, ராணுவப் படையின் பாதுகாப்பில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும். அப்படி நடந்தால், அது 2018-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பதவியைத் துறந்து தேர்தலைச் சந்தித்தால், மக்களின் பெருவாரியான ஆதரவில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்\று முதல்வர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிகிறது.