அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சட்ட நிபுணர்களிடம் சித்தராமையா அவசர ஆலோசனை
காவிரி நீர் பிரச்சனையில் நாளுக்கு நாள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகள் தமிழகத்திற்கு ஆதரவாகவே வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சட்ட நிபுணர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் சற்று முன்னர் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு வரும் 19-ஆம் தேதி காவிரி மேற்பார்வைக் குழு, 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இந்த விசாரணைகளின்போது கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கர்நாடக அரசுத் தரப்பு வாதங்களை அமைத்துக் கொள்வது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. காவிரி நதி நீர் உரிமைக்காக கர்நாடகம் முன்வைக்கும் வாதங்களை சட்ட நிபுணர்களால் செழுமைப்படுத்தியுள்ளோம். காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், இதுவரை அரசு பின்பற்றிவரும் நிலைப்பாடு, சட்டப் போராட்டம், மழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, எதிர்கால சட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. சட்ட அறிஞர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது என்று கூறினார்.
இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறியபோது, ‘காவிரி வழக்கில் மாநில அரசு நடத்திவரும் போராட்டத்துக்கு சட்ட நிபுணர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேற்பார்வைக் குழுவில் கர்நாடகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்கும் ஆற்றல் கிடைத்துள்ளது. மாநில மக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து சட்டப் போராட்டத்தை எதிர்கொள்வோம் என்று கூறினார்.
என்.குமார், முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர்கள் பி.வி.ஆச்சார்யா, அசோக் ஹாரனஹள்ளி, ரவிவர்மகுமார், அரசு தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.