டாக்டர் போடும் ஊசிக்குப் பயந்து, ஹாஸ்பிட்டலுக்குச் செல்ல வேண்டும் என்றாலே குழந்தைகள் அழ ஆரம்பித்துவிடுவார்கள். ‘எத்தனை மாத்திரை வேணும்னாலும் போட்டுக்குவேன், ஊசி மட்டும் வேண்டாம்’ என்று பெரியவர்களே சொல்வார்கள். ஊசி என்றால் , ஆளாளுக்கு அவ்வளவு பயம். ஹலோ… உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இப்போது சாதாரணக் காய்ச்சலுக்கு எல்லாம் ஊசி போட வேண்டாம் என்று அறிவித்திருக்கிறது அரசு.
‘காய்ச்சல் விரைவில் குணமாவதற்குப் போடப்படும் ஊசிகளால், நிறைய பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, எந்த மருத்துவரும் ஊசி போடக் கூடாது. காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளை மட்டுமே தரவேண்டும்’ என தமிழக சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊசியால் பக்க விளைவுகள் வருமா? சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர் ரகுநாதனிடம் கேட்டோம்.
‘காய்ச்சலை உடனடியாகக் குறைக்கவே ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. மாத்திரை சாப்பிட்டவுடன் அது வயிற்றுக்குச் சென்று அங்கு கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் கலந்து வேலை செய்வதற்கு நிறைய நேரம் பிடிக்கும். ஆனால் மருந்தை ஊசிகள் முலம் செலுத்துவதால் அது உடனடியாக ரத்தத்துடன் கலந்து காய்ச்சலைக் குறைத்துவிடும். இதனால் தான் ஊசிகளைப் பயன்படுத்துவது வழக்கம். பொதுவாக காய்ச்சலுக்கு பாராசிட்டமால் ஊசிகளைப் போடுவார்கள்.
ஊசிமருந்து எவ்வளவு வேகமாகச் செயல்படுமோ, அதே வேகத்தில் வாய் வழியாக எடுக்கப்படும் மருந்துகளும், சிரப்புகளும் செயல்படும் அளவுக்கு மருத்துவம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. மருந்துகள் விழுங்க சிரமப்
பட்டாலும், சப்போசிட்டரி (Suppository) முறைப்படி ஆசனவாய் மூலம் மருந்துகள் செலுத்தும் முறையும் வந்துவிட்டது. ஊசிகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவது, காய்ச்சலைக் குறைக்க மட்டுமே. குணப்படுத்த அல்ல. நல்ல துணியை இதமான வெப்பம் உள்ள நீரில் நனைத்து, உடல் முழுவதும் துடைத்துவிட்டால் பத்து நிமிடங்களுக்குள் காய்ச்சல் குறைந்துவிடும்.
‘சீக்கிரமே காய்ச்சல் குணமாகணும். மாத்திரை வேண்டாம், ஊசி போடுங்க டாக்டர்’ என சிலர் வருவார்கள். சில மருத்துவர்களும் காய்ச்சலை உடனடியாகக் குணப்படுத்த ஸ்டீராய்டு (Stroid), டைக்லோபினாக், ஊசிகளைப் போடுவார்கள். இது முற்றிலும் தவறு.
ஸ்டீராய்டு மருந்து, காய்ச்சலைக் குணப்படுத்தினாலும், வருங்காலத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அரிதாகப் புற்றுநோய் போன்ற நோய்கள் வரவும்கூடும்.
முதலில் காய்ச்சல் வந்தவர்களுக்கு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து காய்ச்சலைக் குறைக்க வேண்டும். பிறகு என்ன காய்ச்சல், எதனால் வந்தது என்று ஆராய்ந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.’
‘இனி ஊசிகளுக்கான தேவைகளே இருக்காதா?’
‘காய்ச்சலுக்கு ஊசி போட வேண்டாம் என்றுதான் கூறியுள்ளோம். ஊசியே தேவை இல்லை என்று கூறவில்லை. ஒருவர் அடிபட்டு வந்தால் அவருக்கு அந்தக் காயத்தின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டு நரம்புகள் பாதிக்காமல் இருக்க டி.டி (ஜிமீtணீஸீus ஸ்ணீநீநீவீஸீமீ) ஊசியைப் போடுவோம். இதனை மாத்திரை, மருந்தாகத் தர முடியாது. ஊசி போட வேண்டிய கட்டாயத்தில் ஊசி போடாமல் இருக்கவும் முடியாது. சில மருந்துகளை ஊசிகள் மூலமே செலுத்த முடியும். ஆனால், காய்ச்சலுக்கு ஊசி என்பது தேவையற்ற ஒன்று. இதை, இனி எல்லா மருத்துவர்களும் செயல்படுத்த இருக்கிறார்கள்.’