சீக்கியர்களின் புனித நூல் தூக்கியெறிந்து அவமதிப்பு. இங்கிலாந்தில் பரபரப்பு
இங்கிலாந்து நாட்டின் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலம் உடைக்கப்பட்டதோடு, புனித நூலும் தூக்கி வீசியெறியப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மேற்கு யோர்க்ஷிர் பகுதியில் கோபிந்த மார்க் என்ற இடத்தில் கோபிந்த சிங் குருத்வாரா என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிப்பாட்டு தலத்தில் தினமும் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் குருத்வாராவை பூட்டி விட்டு பின்னர் மறுநாள் காலை பார்த்த போது அந்த வழிபாட்டு தலத்தின் கேட் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே புனிதமாக கருதப்பட்டு வரும் சீக்கியர்களின் புனித நூல் வெளியே தூக்கி வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி சீக்கியர்கள் மனவேதனை அடைந்தனர். இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குருத்வாராவை அவமதித்த மர்ம கும்பலுக்கு வலைவீசி வருவதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு இந்தியா உள்பட உலகெங்கிலும் வாழும் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.