மோடிக்கு எதிராக மனித உரிமை புகார் அளித்த சீக்கிய அமைப்பு. கனடாவில் பெரும் பரபரப்பு.

,pdoபிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக பாரத பிரதமர் மோடி நேற்று புதுடில்லியில் இருந்து கிளம்பிய நிலையில் கனடாவில் அவர் மீது மனித உரிமை புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வராகவும் இருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு, கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவி என்பவரிடம், அந்நாட்டில் வாழும் சீக்கிய அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி, அடுத்த வாரம் கனடா செல்லவுள்ள நிலையில் இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீக்கியர் அமைப்பு கொடுத்த புகார் மனுவில் நரேந்திர மோடி கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை பரவுவதற்கு உதவி புரிந்தார். எனவே மோடி மீது மனித உரிமை மீறல் குற்ற வழக்கு தொடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே அமைப்பு கடந்த ஆண்டு மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்த நாட்டு நீதிமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் தலைமைப் பதவியில் ஒருவர் இருக்கும்போது, அவர் மீது, அமெரிக்கச் சட்டத்தின்படி மனித உரிமை மீறல் வழக்குத் தொடுக்க இயலாது. மேலும், இந்தியப் பிரதமர் மீது மனித உரிமை வழக்கு தொடுக்க இயலாதவாறு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அந்த நாட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால், மனித உரிமை மீறல் குற்ற வழக்கில், ஒரு தேசத்தின் தலைவருக்கு அமெரிக்க, இந்திய சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, கனடா நாட்டு சட்டத்தில் வழங்கப்படவில்லை என்று காரணம் கூறி, மோடி மீது வழக்கு தொடுக்கவேண்டும் என்று நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (எஸ்எஃப்ஜே), கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம் புகார் கொடுத்துள்ளது.

Leave a Reply