உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ள பிரபல ஃபாஸ்ட்புட் நிறுவனமான ‘மெக்டொனால்ட்’ (McDonald) நிறுவனத்தின் இத்தாலி கிளையில் உள்ள மெனு கார்டில் பொற்கோவில் படம் இடம் பெற்றுள்ளதாகவும் அவற்றை உடனே நீக்க வேண்டும் என்றும் சீக்கிய மதத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இத்தாலி நாட்டில் உள்ள மெக்டொனால்ட் நிறுவனம் சமீபத்தில் புதிய மெனு கார்டு ஒன்றை வடிவமைப்பு செய்துள்ளது. இதில் உணவு வகைகளின் படங்களுக்கு பின்னால் சீக்கியர்கள் புனித தலமான பொற்கோவில் இடம்பெற்றுள்ளது. இதற்கு சீக்கியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அசைவ உணவு வகைகளின் பின்னால் பொற்கோவிலின் படம் இருப்பது சீக்கிய மதத்தின் புனித தலத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று அந்த மதத் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சீக்கிய மதத்தலைவர் ஒருவர் இத்தாலியில் உள்ள மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், இல்லையேல் உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.