கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்

கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்
simbu
கடந்த டிசம்பர் மாதம் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ‘பீப் பாடலில் சிம்பு பாடிய பாடல் ஒன்றில் ஆபாச வார்த்தைகள் மற்றும் பெண்களை அவமதிக்கும் கருத்துக்கள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் கொதித்து எழுந்த பெண்கள் அமைப்புகள் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து சிம்பு மற்றும் அனிருத் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இந்த சம்மனின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனிருத் ஆஜராகி விளக்கமளித்தார்.

ஆனால் நேரில் ஆஜராக காலம் கடத்தி வந்த சிம்புவை சென்னை உயர்நீதிமன்றம் இம்மாதம் 24ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று சிம்பு கோவை போலீஸ் முன் ஆஜரானார். சிம்பு இன்று ஆஜராவதை அறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் முன் குவிந்தனர். இந்நிலையில் சிம்பு கைது செய்யப்பட வாய்ப்பு இருந்ததாக வதந்தி வெளிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

காவல்நிலையத்தில் ஆஜராகிய பின் வெளியே வந்த சிம்புவிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அவர்களிடையே பேசிய சிம்பு, “காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன். என் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்” என்று கூறினார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply