டுவிட்டரில் இருந்து சிம்பு விலகல். சினிமாவில் இருந்து விலகுவது எப்போது?
நடிகர் சிம்புவின் படங்கள் வருகின்றதோ இல்லையோ, தினமும் அவருடைய டுவிட்டர் கணக்கில் ஏதாவது டுவீட் வந்துகொண்டே இருக்கும். தன்னுடைய ரசிகர்களை தனது டுவீட் மூலம் உற்சாகமாக வைத்துக்கொண்டிருப்பார் சிம்பு. இதனால் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 84,000 ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென தான் டுவிட்டரை விட்டு விலகுவதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிம்பு தனது கடைசி டுவீட்டில் கூறியிருப்பதாவது, “இதுவரை என் ரசிகர்களும் , என் நண்பர்களும் என்னை டுவிட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது டுவிட்டர் எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும். தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிவு செய்வேன். நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான். அவர்களுடனான என்னுடைய தொடர்பு வெற்றி படம் மட்டும் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை” என்று சிம்பு கூறியுள்ளார்.
சிம்புவின் இந்த முடிவுக்கு அவருடைய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், பலர் அவரை கலாய்த்து பதில் டுவீட் போட்டுள்ளனர். “அப்படியே நடிப்பையும் தொடரப் போவதில்லை என்று முடிவெடுங்கள். நாடு நன்றாக இருக்கும்” என்றும், “ரசிகனுக்கு நல்ல தரமான படத்தைக் கொடுக்க வேண்டும்… அப்படி ஒண்ணும் நடக்குறமாதிரி தெரியலயே” என்றும், “தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள தரமான படங்களை உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். காதல் என்ற கதையை தவிர்த்து நல்ல படங்களில் நடித்து உங்களது ரசிகர்களை மகிழ செய்யவும்” என்றும் பதில் டுவீட் அளித்துள்ளனர்.