சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுபவரும், சிங்கப்பூரின் முதல் பிரதமருமான லீ குவான் இன்று அதிகாலை 3.18 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த தகவலை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை அடைய பாடுபட்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் லீ குவான் யூ. நம் நாட்டின் மகாத்மா காந்திக்கு இணையாக அந்த நாட்டில் மதிக்கப்பட்ட இவர் சிங்கப்பூரின் தேசத்தந்தை என்றும் அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மலேசியாவில் இருந்து தனி நாடாக பிரிவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
91 வயதாகும் லீ குவான் யூ, கடந்த 1990ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவர் சமீபத்தில் நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானதை அடுத்து இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்துவிட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய தலைவர்கள் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் மறைந்த சிங்கப்பூர் தலைவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.