வளர்ந்து வரும் குழந்தைகள் தற்போது தமிழ் மொழியை மிக எளிமையான முறையில் கற்றுக்கொள்ள புதிய அப்ளிகேஷன் ஒன்றை சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இலவசமாக டவுன்லோடு செய்து குழந்தைகளுக்கு தமிழ் மொழியை மிக எளிதாக கற்று கொடுக்கலாம். தமிழ் மொழியை சிலேட்டில் குச்சி வைத்து சொல்லி கொடுத்த காலம் போய் தற்போது ஆண்ட்ராய்டு போன் மூலம் சொல்லிக்கொடுக்கும் காலம் வந்துவிட்டது.
சிங்கப்பூரில் நேற்று 14வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்தியா உள்பட 10 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களும், பிரநிதிகளும் கலந்துக் கொண்டனர். இந்த மாநாட்டில், “அரும்பு” என்ற மொபைல் அப்ளிகேஷனை சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்டார். இந்த “அரும்பு” அப்ளிகேஷன் சிறு குழந்தைகளிடம் தமிழ் மீதான ஆர்வத்தை உருவாக்கவும், அவர்கள் வேடிக்கையான முறையிலும், அதேசமயம் எளிதாகவும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அமைச்சர் ஈஸ்வரன் கூறும்போது, ”இன்று பல மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நம்முடைய மொழியை இழக்க நேரிடும். நாம் வெற்றிகரமாக தமிழ் மொழிக்கான மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளோம். குழந்தைகள் “அரும்பு” ஆப் மூலம் பெரிதும் பயன்அடைய முடியும். ஆடியோ மற்றும் வீடியோ தொழில் நுட்பங்கள் மூலம் இளம் குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும். தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் சிங்கப்பூர் வரவேற்று உள்ளது.
தமிழ் மொழியினை பயன்படுத்துவதற்கு, வசதியாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் சிங்கை அகரம் (ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து தமிழ் டிஜிட்டல் அகராதி) போன்ற அகடாமிக் சாப்ட்வேர்களையும் வெற்றிக்கரமாக செயல்படுத்தி உள்ளோம். தமிழ் மொழியினை பிரபலப்படுத்த எங்களுடைய முயற்சிகள் மற்றும் ஊடக தொழில்நுட்பங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் சென்றடையவும் எங்களுடைய முயற்சியானது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் 4 அரசு மொழிகளில் ஒன்று தமிழ் ஆகும். மலையாளம், சீன மற்றும் ஆங்கில மொழியும் அங்கு அரசு மொழியாக உள்ளது. சிங்கப்பூரில் அரசு தரப்பில் நாடு முழுவதும் தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் ஆண்டு, மொழி பேசும் பிரசாரங்கள், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்படுகிறது. சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ் மொழியினை கற்றுக் கொள்ளவும், கற்பித்தலை ஊக்குவிக்கவும் தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது”
இவ்வாறு அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார்/.