தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிங்கப்பூர் எம்.பி. மன்னிப்பு
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய பெண் எம்பி டெனைஸ் புவா தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சாலை விபத்தில் தமிழர் ஒருவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 37 போலீஸார் உள்பட 62 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பெண் எம்பி டெனைஸ் புவா, ‘வன்முறை நடந்த மாவட்டத்தை சமீபத்தில் சுற்றிப் பார்த்தேன். வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் தற்போது அங்கு மீண்டும் கூடியுள்ளனர். அவர்களை பார்க்கும்போது நடமாடும் ‘டைம் பாம்’கள் போல உள்ளனர். எப்போது வேண்டுமென்றாலும் வெடித்து பொது அமைதிக்கு அவர்களால் பங்கம் ஏற்படுத்த முடியும். எனவே இந்த விவகாரத்தின் மீது அரசு ஒரு கண் வைக்க வேண்டும். வேறு பகுதிக்குள் அவர்களை நுழைய விடாமல் வேலி போட வேண்டும்’ என்று கூறினார்.
டெனைஸ் புவாவின் இந்த பேச்சு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஃபேஸ்புக்,டுவிட்டர் மூலம் அவருக்கு எதிராக கண்டனப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து தனது பேச்சுக்கு டெனைஸ் பகிரங்க மன்னிப்பு கூறியுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ‘‘குறிப்பிட்ட ஒரு பிரிவினரை தரம் தாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. நடமாடும் ‘டைம்-பாம்’கள் என்றும் விமர்சிக்கவில்லை. எனது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.