ரத்தான ஜூன் 12ஆம் தேதி சந்திப்பு மீண்டும் நடைபெறுகிறதா? டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருந்தா நிலையில் இந்த சந்திப்பு ரத்தானதாக சமீபத்தில் வெள்ளை மாளிகை அறிவித்தது. ஆனால் இந்த சந்திப்பு அதே தேதியில் நடைபெறும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தா இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் குறித்து பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்று டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தை டிரம்பிடம் கொடுத்தார்.
இதையடுத்து, திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது:-
நாங்கள் ஜூன் 12-ம் தேதி அந்நாட்டு தலைவரை சந்திக்க உள்ளோம். இது ஒரு வெற்றிகரமான செயற்பாடாக இருக்கும். நான் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூர் பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் நல்லது நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்த ஒரு கூட்டத்தில் மிகவும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன். இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும்.