அவர் இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வார். கோவனின் மனைவி ஆவேசம்

அவர் இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வார். கோவனின் மனைவி ஆவேசம்
kovan
‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலில் முதல்வர் ஜெயலலிதாவை தாக்கும் வார்த்தைகள் இருந்ததாக கூறி பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது இந்த கைது என அனைத்து கட்சிகளும் கோவனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

கோவனின் பாடல்கள் குறித்தும், கைது குறித்தும் அவரது குடும்பத்தினர் சொல்வது என்ன? என்பதை தற்போது பார்ப்போம்.

கோவனின் தாயார் பார்வதி: “திருவாரூர் குடவாசல் பக்கத்தில் இருக்கும் பெருமங்களம்தான் எங்களுக்குச் சொந்த ஊர். அவங்க அப்பா சுப்பையா ஒரு விவசாயி. கோலாட்டக் கலைஞர். நான் கிராமத்துல விவசாய வேலைகளுக்குப் போவேன். நானும் நல்லாப் பாடுவேன். பொதுவாகவே, விவசாயிகள் மண்ணையும் மக்களையும் நேசிக்கிறவங்க. நடவுப்பாட்டு, கும்மி, அம்மானை, ஒப்பாரி என எல்லாத்துக்கும் பாட்டுதான். எல்லா பாடல்களையும் நான் பாடுவேன்.

எங்களுக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். பையன் பேரு சிவதாஸ். நான் வயல்ல நாத்து நட்டுக்கிட்டே பாட்டு பாடுனா, அதை வரப்புல உட்காந்துக்கிட்டு சிவதாஸ் கேட்பான். ஐ.டி.ஐ. முடிச்சவுடனேயே அவனுக்கு திருச்சி பெல் கம்பெனியில வேலை கிடைச்சது. எங்க குடும்ப கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சந்தோஷப்பட்டோம். அப்பத்தான், அவனுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களோட பழக்கம் ஏற்பட்டுச்சு.

சின்ன வயசுல, வயல்காட்டுல நான் பாடுற பாட்டுக்களைக் கேட்டு வளர்ந்த சிவதாஸ், அவன் வேலை செஞ்ச கம்பெனியில சாப்பாட்டு வேளையில பாடுவானாம். அது, கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. அவனுக்கு அரசியல் கத்துக்கொடுத்திருக்காங்க. ‘நீங்க நல்லா பாடுறீங்க. உங்களோட குரல்வளம், மக்களோட விடுதலைக்குப் பயன்படணும்’னு சொல்லியிருக்காங்க.

அவங்க பேசுன விஷயங்கள் மேல சிவதாஸுக்கு ஈர்ப்பு வந்து, ஊர் ஊராகப் பொதுக்கூட்டங்களில் பாடுறதுக்குப் போக ஆரம்பிச்சான். அந்தச் சமயத்துலதான், ‘சிவதாஸ்’ என்ற பெயரை, ‘கோவன்’ என மாத்திக்கிட்டான். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயமுமா பாடுபட்டோம்’ என்ற பாடல்தான், அவனோட முதல் பாடல். அவன் பாட ஆரம்பிச்சான்னா, மக்கள் கூட்டம் தானாகக் கூடும். அந்த அளவுக்கு அவனோட பாட்டு இனிமையா இருக்கும்.

பையன் இப்படி போறானேன்னு முதல்ல நாங்க பயந்தோம். அப்புறம், அவன் போற வழி நல்லவழின்னு தெரிஞ்சது. அவனைச் சுதந்திரமாக விட்டுட்டோம். அமைப்புல இருந்த ஒரு தோழரோட தங்கச்சி ஜெயலட்சுமியை அவனுக்குக் கல்யணம் பண்ணி வெச்சோம். இப்போ, அவனுக்கு ரெண்டு பிள்ளைங்க. பையன் சாருவாகன் வக்கீலா இருக்கான். பொண்ணு ஹோமியோபதி டாக்டருக்கு படிக்கிறாங்க.

கோவனுக்குத் துணையாக கலைக்குழுவில் என் மகளும், மருமகனும் இருக்காங்க. குடும்பமாக அமைப்பு வேலைகளைக் கவனிக்கிறாங்க. பாழாய் போன டாஸ்மாக்கை மூடச்சொல்லி போராடினதுக்காக, அவனை நாயைப்போல நடத்தி அழைச்சிக்கிட்டுப் போனாங்க” என்று ஆத்திரத்துடன் கூறியுள்ளார்

கோவனின் மனைவி ஜெயலட்சுமி: “என்னோட கணவர், தான் ஏத்துக்கிட்ட கொள்கைக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இயக்க வேலைக்கு வந்துட்டாரு. சில வருஷங்களுக்குப் பிறகு, டிப்ளமோ ஹோமியோபதி படிச்சி முடிச்சாங்க. போராட்டம், மக்கள் பணி எனப் போகும் வழியில், உடம்பு சரியில்லைனு யாராவது வந்தால் அவங்களுக்கு மருந்துகொடுப்பாரு. அப்படித்தான் முந்தினநாள் அம்மா ஒருத்தர் நெஞ்சு வலின்னு நடுராத்தி வந்து கதவை தட்டினாங்க. அவங்களுக்கு முதலுதவி செஞ்சு, மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாரு.

அதுக்கப்புறம் நடுராத்திரி கதவு தட்டுற சத்தம் கேட்டு, அந்த அம்மாவா இருக்கும்னு நெனச்சு கதவைத் திறந்தாரு. அப்போ, வீட்டை சுத்தி போலீஸ் நின்னாங்க. அதுல ஒருத்தர் மட்டும் சீருடையில் இருந்தார். ‘உங்களை விசாரிக்கணும். உறையூர் ஸ்டேஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க. சட்டை போட்டுக்கிட்டு வர்றேன்னு திரும்பினாரு. ‘அதெல்லாம் முடியாது’னு சொல்லி பின்னங்கழுத்துல இறுக்கிப் பிடிச்சி தள்ளிக்கிட்டுப் போய், வண்டியில ஏத்தினாங்க. கட்டியிருந்த கைலியோடு கூட்டிக்கிட்டுப் போனாங்க. உறையூர் கொண்டு போறோம், அங்க வாங்கன்னு எங்ககிட்ட சொல்லிட்டுப் போனாங்க. உடனே ஸ்டேஷன்ல போய்ப் பார்த்தோம். அப்படி யாரும் கைது செய்யப்படலைன்னு அங்க சொல்லிட்டாங்க.

காலை 10 மணி வரைக்கும் ஸ்டேஷன் வாசல்லயே கிடந்தோம். என் கணவரை எங்கே வெச்சிருக்காங்கனே தெரியல. அப்புறம், உறையூர் எஸ்.ஐ முத்துசாமி அந்தக் கூட்டத்துல இருந்தார்னு தெரியவந்துச்சு. அவருக்கு போன் பண்ணி கேட்டோம். ‘மேலதிகாரிங்க போகச் சொன்னாங்க. அதனால வந்தேன். அதுக்குமேல எதுவும் சொல்ல முடியாது’னு அவர் சொல்லிட்டார்.

அவரைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில்தான், ஸ்டேஷனை முற்றுகையிடப் போனோம். அப்பத்தான், சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் மெல்வின் என்பவர் போன் பண்ணி, ‘நாங்கதான் அவரை கைது பண்ணியிருக்கிறோம். அவரை சென்னைக்கு அழைச்சிட்டுப் போறோம். சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தால் அவரை பார்க்கலாம்’னு சொன்னார். ஆனாலும், அவரை எங்கள் அமைப்பு தோழர்களால்கூட சந்திக்க முடியலை. எதுக்கு இவ்வளவு நெருக்கடி?

அவரை கைது செய்கிறோம்னு சொன்னால், நானே அனுப்பி வெச்சிருப்பேன். நடுராத்திரியில ஒரு தீவிரவாதியைப்போல அவரை கைது செஞ்சுருக்காங்க. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால் இதுதான் நிலைமைனு அச்சுறுத்துறதுக்காக இப்படி செஞ்சிருக்காங்க.

என் கணவர் என்ன தப்பு செஞ்சுட்டார்? ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை புள்ளைக்குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கிலாமா?’ என்ற பாடலை விடவா கலாசாரத்தைச் சீரழிக்கிற பாடலை அவர் எழுதிட்டார்? மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மக்கள் படும் சிரமங்களை பாடல்களாக எழுதிப் பாடுனதுக்கு, டாஸ்மாக்கை மூடச் சொன்னதுக்கு தேசத் துரோக வழக்கா?

இதுதான் அவர் செஞ்ச குற்றம்னு சொன்னா, அவர் இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வார். அவரோட சேர்ந்து நாங்களும் பாடுவோம். நாங்கள் பாடுறதை யாராலும் தடுக்க முடியாது. எங்களுக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. பூட்டுப்போடணும்னு ஆசைப்பட்டா, தமிழக அரசு முதல்ல டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடட்டும்” என்று ஆக்ரோஷமாக கூறினார்.

Leave a Reply