ஓலைக்குடிசையாக இருந்தாலும், அது சொந்தமாக இருந்தால் தனி மதிப்புதான். சிறு நகரங்களிலோ கிராமங்களிலோ சொந்தமாக உள்ள சிறிய மனையில் வீட்டைக் கட்டிக்கொண்டு குடியிருப்பவர்களைப் பார்க்க முடியும.
ஆனால், சென்னையிலோ சிறிய மனையில் வீடு கட்டுவது என்பதெல்லாம் சுலபத்தில் முடியாத காரியம். சென்னையில் ஒருவர் 500 சதுர அடியோ, 400 சதுர அடியோ மனை வைத்திருந்தால், அந்த மனையில் வீடு கட்ட முடியுமா? அதற்கு அனுமதி கிடைக்குமா?
சென்னை நகரில் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாகக் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. பார்க்கும் இடங்களிலும் எல்லாம் கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்து வருகின்றன. இருந்தாலும் சென்னை நகரில் இடநெருக்கடியும் இருக்கவே செய்கிறது.
இன்னொரு புறம் சென்னை மாநகராட்சியின் எல்லை விரிந்துகொண்டே போகிறது. எனவே சென்னை நகருக்குள் வீடோ மனையோ வாங்க முடியாதவர்களின் விருப்பம் புறநகர்ப் பகுதியாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாகப் புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானங்கள் பெருகி வருகின்றன.
சொந்த வீடு கட்ட நினைக்கும் பலரும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதிகளில் ஒரு சிறிய மனையையாவது வாங்கி வீடு கட்ட நினைக்கிறார்கள். அதனால் பலரும் கிடைக்கும் மனைகளை வாங்கவும் செய்கிறார்கள். தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப 600 சதுர அடி, 500 சதுர அடி, 400 சதுர அடியில் உள்ள மனைகளைக்கூட வாங்கும் நிலை உள்ளது.
இப்படிச் சிறிய மனைகளை வாங்குவது பலருக்கும் பெரிய விஷயமாக இருப்பதில்லை. வீடு கட்ட அனுமதி வாங்கும்போதுதான் பிரச்சினைகள் தெரியவே வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 860 சதுர அடிக்குக் குறைவாக உள்ள மனைகளில் வீடு கட்ட அனுமதி கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. மனையை வாங்கிய பின்னர் வீடு கட்ட அனுமதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கும், பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்துக்கும் (சி.எம்.டி.ஏ.) நடையாய் நடந்து கொண்டு இருப்பார்கள்.
சிறிய மனையில் வீடு கட்ட அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் இருக்கக் காரணங்கள் உள்ளன. மனையில் பாதை விடுவது, வீடு கட்ட இடைவெளி விடுவது, அறைகளை அமைப்பது போன்ற விஷயங்களைச் சிறிய மனைகளில் செய்துவிட முடியாது. எனவேதான் சிறிய மனையில் வீடு கட்ட அனுமதி அளிப்பது சென்னையில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வருகிறது. இப்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. சிறிய மனையிலும் வீடு கட்டத் திட்ட அனுமதி அளிக்கும் வகையில் அண்மையில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது சென்னை மாநகராட்சி.
அதாவது, தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சில வரைமுறைக்குட்பட்டு மாநகராட்சி பகுதியில் சாதாரணக் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது.
சென்னை பெருநகரக் குழுமம் அளித்துள்ள அதிகாரப்படி 860 சதுர அடிக்குக் கீழே உள்ள மனைப் பிரிவுகளில் சாதாரணக் குடியிருப்புகள் கட்டக் குறைந்த மனைப்பிரிவுக்கு அனுமதி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 300, 400, 500, 600 சதுர அடி மனைகளில் வீடு கட்ட அனுமதி வழங்குவதும் எளிதாகியுள்ளது. இந்த முறையில் மனையின் குறைந்தபட்சப் பரப்பளவு என்பதைச் செய்யாமலும், குறைந்தபட்சம் ஒரு மீட்டர் பாதையுள்ள மனையில் வீடு கட்டுவதற்கும் ஒப்புதல் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மனையில் குறைந்தபட்சமாகப் பாதையின் அளவு 3 அடி இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தச் சிறிய மனைகளில் நினைத்த கட்டுமானங்களைச் செய்துவிட முடியாது. இந்த மனைகளில் வீடு கட்ட மட்டுமே அனுமதி கிடைக்கும். வர்த்தகச் செய்யும் நோக்கத்தில் இந்த மனைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மனை வைத்துள்ளவர்களுக்கு இந்த அனுமதி அளிக்கும் விஷயம் நிச்சயம் சாதமாக இருக்கும். எனவே சென்னை மாநகராட்சியில் சிறிய மனை வைத்துள்ளவர்களும் வீடு கட்ட ஆர்வம் காட்டக்கூடும். எனவே மாநகரப் பகுதியிலும், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட புறநகர்ப் பகுதிகளிலும் இன்னும் கட்டுமானங்கள் பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.