சிறுவாபுரியில் வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம்!

1

சென்னையில் இருந்து கொல்கத்தா நெடுஞ்சாலையில், சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னம்பேடு கிராமம். சிறுவாபுரி என்றும் அழைக்கப்படும் இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி, மிகுந்த வரப்பிரசாதி.

இங்கு வந்து கந்தபிரானை வேண்டினால், பிள்ளைச் செல்வம் பெறலாம். வீடு – வாசல் என வாழலாம். கடன் தொல்லையும் நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். முக்கியமாக, சிறுவாபுரி நாயகனைத் தொழுதால், சீக்கிரமே கல்யாண யோகம் கைகூடி வரும் என்பது ஐதீகம்!

கல்யாணக் கவலையால் வாடுகிற ஆண்களும் பெண்களும், சிறுவாபுரி கோயிலில், அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினருடன் இணைந்து, வருடந்தோறும் ஸ்ரீவள்ளிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் திருக்கல்யாண உத்ஸவம் நடத்துகின்றனர். திருமணத் தடையுள்ள ஆண்களும், பெண்களும்… இந்த உத்ஸவத்தின்போது பிரசாதமாகத் தரப்படும் மாலையை அணிந்துகொண்டு, ஸ்வாமியை வலம் வந்து பிரார்த்திக்கிறார்கள். அப்படிப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு விரைவில் கல்யாண வரம் தேடி வருகிறது என்று பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்,

வரும்  6-ஆம் தேதி , சிறுவாபுரியில் விமரிசையாக நடக்கிறது திருக்கல்யாண உத்ஸவம். காலை 6.30 மணிக்குத் அபிஷேகத்துடன் துவங்கும் இந்த வைபவத்தில், கல்யாண வரம் வேண்டி தரிசிக்கலாம்.

அபிஷேகம், திருக்கல்யாண உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என முடிந்ததும், அன்னதானமும் நடைபெறு கிறது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அன்னதானப் பணியில் பங்கேற்கின்றனர். இது, கிட்டத்தட்ட கல்யாண விருந்து போலவே அமர்க்களப்படுகிறது!

‘கல்யாணம் இன்னும் தகையலையே…’ எனக் கலங்கித் தவிக்கும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி, சிறுவாபுரிக்கு அனுப்புங்கள். அந்தப் புண்ணியம் உங்களை வந்தடையும்!

Leave a Reply