கண்ணனின் உத்தரவுப்படி, தர்மர் படாத பாடு பட்டு ராஜசூய யாகம் செய்தார். பாண்டவர்களில் மூத்தவனான தருமராஜன் தங்களுக்கென ஒரு சிறிய ராஜ்ஜியத்தை அமைத்துக்கொண்டு மயனால் சிருஷ்டிக்கப் பட்ட இந்திரப்பிரஸ்தம் என்ற நகரைத் தலைநகராக்கி, ராஜ்ய பரிபாலனம் செய்யத் தொடங்கினான். சகோதரர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனுக்கு உறுதுணையாக நின்றனர். இந்த நிலையில் , பஞ்சபாண்டவர்களது ஆத்ம நண்பனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைப்படி ராஜசூயம் எனும் மிகப் பெரிய யாகத்தை நடத்த ஏற்பாடு செய்தான் தருமராஜன். ராஜசூயம் என்பது அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பான ஒரு பெரிய யாகம். அப்போது, எல்லா நாட்டு அரசர்களையும் அழைக்கும் சம்பந்தப்பட்ட மன்னன், எல்லோரது ஒப்புதல்களுடனும் தன்னை ராஜாதிராஜனாக பிரகடனம் செய்துகொள்வது வழக்கம். அந்த அடிப்படையில் தருமன் ராஜசூய யாகத்துக்கு ஏற்பாடு செய்தான். எல்லா தேச மன்னர்களையும் அழைத்தான். தேவ சிற்பி மயனைக் கொண்டு மன்னர்கள் தங்குவதற்கான மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், உப்பரிகைகள், அந்தப்புரங்கள் போன்றவற்றை அமைத்து, இந்திரப்பிரஸ்தத்தைத் தேவலோகம் போல ஆக்கினான். தங்களின் தாயாதி சகோதரர்களான துரியோதனன் முதலான கவுரவர்களையும் யாகத்துக்கு அழைத்திருந்தனர் பாண்டவர்கள். அவர்களும் வந்தனர். தருமனின் செல்வச் செழிப்பையும் பெயரையும் புகழையும் கண்டு உள்ளம் குமுறியபடியே ராஜசூய யாகத்தில் பங்கேற்றனர். கவுரவர்கள் எப்படியாவது குழப்பம் விளைவித்து, அந்த யாகத்தை அழிக்க நினைத்தனர். அவர்களுக்கு உறுதுணையாக சேதி நாட்டு மன்னன் சிசுபாலனும் வந்திருந்தான்.
சிசுபாலன், கண்ணனின் தாயாதி, நெருங்கிய உறவினன். என்றாலும், கண்ணனிடம் தீராப்பகை கொண்டவன். கண்ணனை வெறுத்தவன். அவன் விரும்பிய ருக்மிணிதேவி, கண்ணனை விரும்பித் திருமணம் செய்துகொண்டது அவன் பகையை மேலும் தீவிரமாக்கியது. அதனாலேயே ராஜசூய யாகத்தில் கண்ணனை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் அங்கே வந்திருந்தான். ராஜசூய யாகம் ஆரம்பமானது, வேதவிற்பன்னர்களும், முனிவர்களும் முன் நின்று நடத்த…. யாகம் முறைப்படி நடந்தது. முடிவில் முதல் தாம்பூலத்தை யாருக்கு அளிப்பது? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தர்மர் சபையில் மூத்தவரான பீஷ்மாச்சாரியாரிடம், உத்தமரே! இந்த ராஜசூய யாகத்தில் யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும்? யாருக்குச் செய்தால், தகுதியாக இருக்கும்? சொல்லுங்கள்! என வேண்டினார். பீஷ்மர், தர்மா! நட்சத்திரங்கள் ஏராளமாக இருந்தாலும், சூரியன்தானே ஒளிவீசிப் பிரகாசிக்கின்றது. அதுபோல, அனைவரிலும் உயர்ந்தவர்; அனைத்திலும் உயர்ந்தவர் கண்ணன்தான். ஆகையால், கண்ணனுக்கே முதல் மரியாதை செய்யவேண்டும் என்றார். தியாகசீலரான பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்டு, முதல் தாம்பூலத்தை கிருஷ்ணனுக்குக் கொடுக்கத் தீர்மானித்தனர் பாண்டவர்கள். மன மகிழ்ச்சியோடு கிருஷ்ணனைக் கொலு மண்டபத்து சிம்மாசனத்தில் அமர்த்தி, தாம்பூலம் தரும் நேரத்தில்…. சபையே அதிரும்படி குரலை எழுப்பி, அதை ஆட்சேபித்தான் சிசுபாலன். கவுரவர்கள் அவனுக்குப் பக்க பலமாக நின்றனர்.
தர்மரைப் பார்த்து, இந்த சபையில் பூஜிக்கத் தகுந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கும்போது, கண்ணன் மட்டும்தான் உன் பார்வையில் பட்டானா? மற்றவர்கள் உன் பார்வையில் படவில்லையா? தகுதியே இல்லாத இந்தக் கண்ணனுக்கு முதல் மரியாதை கொடுக்கச் சொல்லி, பீஷ்மர் தவறு செய்துவிட்டார். நீயும் பீஷ்மர் விருப்பத்துக்கு இணங்கி விட்டாய். அடுத்தவர் விருப்பத்துக்காக ஒரு காரியத்தைச் செய்யலாமா? இவ்வளவு அரசர்களுக்கு மத்தியில் அரசனாக இல்லாத கண்ணனுக்கு நீ எப்படி முதல் மரியாதை செய்யலாம்? ஒருவேளை கண்ணன் வயதில் முதிர்ந்தவன் என்று நினைக்கிறாயா? அப்படிப் பார்த்தாலும் கண்ணனின் தந்தை வாசுதேவர் இருக்கிறாரே! அவர் இருக்கும்போது, அவர் மகனுக்கு நீ எப்படி முதல் மரியாதை கொடுத்தாய்? சரி.. நீதான் கண்ணனுக்கு முதல் மரியாதை கொடுத்தாய், அதைக் கண்ணன் எப்படி ஒப்புக்கொண்டான்? துருபதன், துரோணர், வியாஸர், பீஷ்மர், அச்வத்தாமா, துரியோதனன், கிருபர், த்ருமன், பீஷ்மகர், ஏகலவ்யன், சல்லியன், கர்ணன் என ஏராளமான அரசர்களும், ஆசார்ய புருஷர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, இவ்வளவு பேரையும் தாண்டி, நீ எப்படிக் கண்ணனுக்கு முதல் மரியாதை செய்தாய்? இந்தக் கண்ணன் உனக்கு உயர்ந்தவனாக இருந்தால், எங்களையெல்லாம் எதற்காக வரவழைத்தாய்? அவமானப்படுத்தவா? என்று தர்மரைக் கேள்விக் கணைகளால் அடித்த சிசுபாலன் சபையோர் பக்கம் திரும்பினான். எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள்! நாங்கள் எல்லாம் இந்தத் தர்மனிடம் பயந்தோ, பலன் கருதியோ, கேட்டுவிட்டாரே என்பதற்காகவோ கப்பம் கட்டவில்லை. ஏதோ இந்த தர்மன் ஆசைப்பட்டதால் ஒப்புக் கொண்டோம். ஆனால் தர்மனோ நம்மை மதிக்கவில்லை. நாமெல்லாம்… இவ்வளவு அரசர்கள் இருக்கும்போது, அரசனாக இல்லாத கண்ணனைத் தூக்கி முன்னால் வைத்துவிட்டான். இதனால் தர்மாத்மா என்ற பெயர், தர்மனை விட்டு விலகிவிட்டது. தர்மத்தின்படி நடக்க சக்தியற்றவன் என்பதும் இப்போது தெரிந்துவிட்டது! என்றான்.
அப்போதும் சிசுபாலனுக்கு ஆற்றாமை அடங்கவில்லை. சிசுபாலன், கண்ணனைக் கேவலமாகத் திட்டினான். பாண்டவர்கள் தடுத்தும் அவன் கேட்கவில்லை. அவன் கண்ணனை நெருங்கி, கண்ணா! பாண்டவர்கள் பரிதாபமானவர்கள், பயங்கொள்ளிகள். அவர்கள்தான் முதல் மரியாதை கொடுக்கிறார்கள் என்றால், இந்த பூஜை உனக்குத் தகுமா என்று நீயாவது அறிந்திருக்க வேண்டாமா? தகுதியில்லாத நீ, அந்தப் பூஜையை எப்படி ஏற்றுக் கொண்டாய்? உண்மையிலேயே இந்த அவமானம் அரசர்களான எங்களுக்கு ஏற்பட்டதல்ல. உனக்குத்தான் இந்த அவமானம். கண்ணனை இடையன் என்றும், மடையன் என்றும், பேடி என்றும், கோழை என்றும் ஏளனமாகப் பேசினான். கண்ணன் பொறுமையோடு அதைக் கேட்டான். சிசுபாலன் அவ்…வளவு பேசியும், அந்தச் சபையில் யாரும் அவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தர்மர் வேக வேகமாக சிசுபாலன் பின்னாலேயே ஓடி அவனைத் தடுத்தார். சமாதானப்படுத்தும் விதமாக இனிமையாகப் பேசத் தொடங்கினார். மன்னா! நீ பேசுவதில் நியாயம் இல்லை. பாவம்தான் கிடைக்கும். கடுமையாகப் பேசாதே! அதில் பலன் இல்லை. தியாகசீலரான பீஷ்மரை, நீ இப்படி அவமதிக்கலாமா? நீயே பார்! உன்னைவிட வயதில் முதிர்ந்த அரசர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் இங்கே! கிருஷ்ணனுக்கு செய்த பூஜையை அவர்கள் எல்லாம் ஏற்கவில்லையா? அதே போல நீயும் இருக்கக்கூடாதா? கண்ணனைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் பீஷ்மர். அது உனக்குத் தெரியாது என்றார் தர்மர். அதுவரை பேசாது இருந்த பீஷ்மர், தர்மரிடம் பேசத் தொடங்கினார். தர்மா! இந்த உலகத்துக்கு எல்லாம் மிகப் பெரியவரான கிருஷ்ணனுக்கு செய்த பூஜையை ஒப்புக் கொள்ளாத இவனுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லக்கூடாது. இவனிடம் இன்சொல் எடுபடாது எனக் கூறினார். அதன்பிறகு பீஷ்மர், சிசுபாலன் உட்பட அந்தச் சபையில் இருந்த அனைவருக்கும் கண்ணனின் பெருமைகளைச் சற்று விரிவாகவே சொன்னார். அப்படிப்பட்ட கண்ணனை எவன்தான் பூஜை செய்யமாட்டான்? மேலும், கண்ணனுக்கு நாம் முதல் மரியாதை செய்தது தவறு என்றால், இப்போது என்ன செய்தால் நியாயமாக இருக்குமோ, அப்படி சிசுபாலன் செய்யலாம் என்று சொல்லி முடித்தார்.
அதைக் கேட்ட சிசுபாலன், பீஷ்மரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினான். அப்போது… தர்மர், பீஷ்மர் முதலான பெரியோர்கள் எல்லாம் பேசுவதால் நாம் பேசக்கூடாது என்று அதுவரை அமைதியாக இருந்த சகாதேவன் பேசத் தொடங்கினான். மகாஞானியான அவனுக்குக்கூடக் கோபம் வந்துவிட்டது. அவன், சிசுபாலனுக்கு மட்டுமல்ல; அங்கிருந்த அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுத்தான். சேதிமன்னா! அரசர்கள் எல்லோரையும்விட, கண்ணன் உயர்ந்தவர். வேறு யாருமில்லை. ஆதலால் நாங்கள் அவரைப் பூஜை செய்கிறோம். இங்கு வந்திருக்கும் அரசர்களில் யாருக்கு இது பிடிக்கவில்லையோ, அவன் உடனே சேனைகளோடு வந்து போர் செய்யட்டும். அவன் தலைமேல் என் காலை வைக்கிறேன். இனிமேல் யாராவது பேசுவதாக இருந்தால் பேசலாம்! என்று சகாதேவன் கர்ஜித்தான். அப்போதும் சபையில் எந்தவிதமான பேச்சும் எழவில்லை. அப்போது சகாதேவன் தலையில் பூமழை பொழிந்தது. ஆகாயத்தில் இருந்து சரி! சரி! என்ற வார்த்தைகள் கேட்டன. நாரதர் மான் தோலை உதறிக்கொண்டு, தாமரை இதழ் போன்ற கண்களை உடைய கண்ணனை பூஜை செய்யாதவர்கள், உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களே! அப்படிப்பட்டவர்களிடம் பேச்சுகூட வைத்துக் கொள்ளக்கூடாது என்றார். ஏற்கனவே சிவந்திருந்த சகாதேவனின் கண்கள் மேலும் சிவந்தன. அவனை சமாதானப்படுத்தும் விதமாக பீஷ்மர், கண்ணனது பெருமைகளை விரிவாகச் சொல்லத் தொடங்கினார். (இந்த இடத்தில் வேத வியாஸர் கண்ணனது பெருமைகளைச் சொல்லத் தொடங்கி, மகாவிஷ்ணுவின் அவதாரங்களை எல்லாம் மிகவும் அழகாகச் சுருக்கிச் சொல்லி இருக்கிறார். அத்துடன் கிருஷ்ணாவதாரத்தில் தொடங்கி கண்ணனுடைய பெருமைகளை விரிவாகவே சொல்லி இருக்கிறார்) கண்ணனுடைய பெருமைகளை எல்லாம் சொன்ன பீஷ்மர், அப்படிப்பட்ட கண்ணனுக்கு மேலாக எதுவும் இல்லை என்று முடித்தார்.
இத்தனை பேர் எடுத்துரைத்தும் சிசுபாலன் யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. நூற்றெட்டு முறைக்கு மேல் எல்லை கடந்து, இழிசொற்கள் பேச ஆரம்பித்தான். அவ்வளவு நேரம் பொறுமை காத்த கண்ணனின் கண்களில் கோபத் தீ உருவானது. அவன் கரங்களில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. அது சூறாவளியாகச் சுழன்று சென்று, சிசுபாலனின் சிரத்தை அறுத்தெறிந்தது. தருமர் திகைத்தார். கண்ணீர் வடித்தார். ராஜசூய யாக சாலையில் இப்படியொரு ரணகளம் ஏன் தோன்ற வேண்டும்? யாகம் முடிந்ததுமே ஏன் ஒரு நரபலி ஏற்பட வேண்டும்? கண்ணன் ஏன் யாக பூமியை யுத்த பூமியாக்க வேண்டும்? என்று சிலர் மனம் குமுறிக் கேட்டனர். நல்லவர்கள், சிசுபாலனை வதம் செய்த கண்ணனை வாழ்த்தினர். தீயவர்கள் அதனைக் கண்டித்து சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். ஆனாலும் ராஜசூய யாகம் தொடர்ந்து நடந்து முடிந்தது. கண்ணன் முதல் தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டான். தருமனை ராஜாதிராஜனாகப் பிரகடனம் செய்தான் கிருஷ்ணன்.
நல்லதொரு யாகத்தில் சிசுபாலனுக்கு அப்படியொரு நிலைமை ஏன் ஏற்பட வேண்டும்? ஜோதிட சாஸ்திர வல்லவனான சகாதேவன்தானே யாகத்துக்கு நாள் குறித்தான்? இப்படியொரு உயிர்ப்பலி நிகழக் காரணமான கெட்ட நாளில், கெட்ட வேளையில் அவன் ஏன் நாள் குறிக்க வேண்டும்? அதே நேரம், சிசுபாலன்தான் முறை தவறி நடந்தான் என்றாலும், தர்மபூமியான யாகசாலையை கண்ணன் ஏன் யுத்த பூமியாக்கி ரத்தம் சிந்த வைக்க வேண்டும்? சிசுபாலனைக் கொல்ல அதுவா இடம்? அதுவா தருணம்? இது தர்மமா? இப்படியெல்லாம் பல கேள்விகள், தருமன் நடத்திய ராஜசூய யாகம் முடிந்ததுமே எழுந்தன. ஆனால், கண்ணன் அந்தக் கேள்விகளுக்கு அப்போது பதிலளிக்கவில்லை. அதே கேள்விகளைத்தான் ராஜசூயம் நடந்து, பல வருடங்கள் கழித்து உத்தவர் கேட்டார். அப்போது கண்ணன் தெளிவான பதில் தந்தான். சிசுபாலன் பிறப்பால் உயர்ந்தவன், வாழ்க்கை அமைப்பாலும், தீய ஒழுக்கங்களாலும் பண்பிழந்தவன். அவன் தாய் நல்லவள். கண்ணனிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவள். தன் மகன் எப்படியாவது திருந்தி நற்கதி பெற வேண்டும் எனத் தவம் செய்தாள். அவன் தவறாக நடந்தாலும் அவனுக்குக் கொடிய தண்டனை தர வேண்டாம் எனக் கண்ணனிடம் கேட்டுக் கொண்டாள். அவன் நூற்றெட்டு முறை தவறு செய்வதைப் பொறுப்பேன் அதற்கு மேலும் தவறிழைத்தால் தண்டனை தப்பாது. என்று கண்ணன் சிசுபாலனின் தாயிடம் கூறியிருந்தான். அப்படியே என் மகன் சிசுபாலன் தண்டனை பெற்றாலும் அவனை மன்னித்து மோட்ச சாம்ராஜ்யம் நல்க வேண்டும் என்று அடுத்ததாக வரம் கேட்டாள் சிசுபாலனின் தாய். விசித்திரமான வரமானாலும். அந்த வரத்தைத் தந்து வாக்களித்தான் கண்ணன்.
இதை நிறைவேற்றுவது எளிதல்ல. தீமைக்குத் தண்டனையும், நன்மைக்கு உயர்வும் நல்குவதே தர்ம நெறி! சிசுபாலனோ நன்மை எதுவுமே செய்யாதவன். அவனுக்கு மோட்சம் கிட்டுவது எப்படி? இதுதான் பிரச்னை. கண்ணன் ஒருவனால்தான் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண முடியும். ராஜசூயம் எனும் சிறப்பான யாகத்தில் சிசுபாலன் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான். முனிவர்கள் ஓதிய மந்திர பலத்தாலும், தூவிய அட்சதையாலும், வழங்கிய ஆசீர்வாதத்தாலும் தெளிந்த புனித நீராலும் ஓரளவு புனிதப்பட்டிருந்தான் சிசுபாலன். யாக அக்னியில் தோன்றிய தேவதைகளின் அனுக்கிரகம், அவன் மீதும் விழுந்திருந்தது. சேர்த்த புண்ணியங்களை அவன் கரைத்துவிடும் முன்பே, அவனைக் கரையேற்ற விரும்பினான் கண்ணன். அப்போதுதான் சிசுபாலன் கண்ணனைத் திட்ட ஆரம்பித்தான். அவன் திட்டிய வார்த்தைகளை, தன்னை பூஜித்த மந்திரமாக, நூற்றெட்டு அர்ச்சனைகளாக ஏற்றுக் கொண்டான் கண்ணன். இதன்மூலம் நிந்தனையையே ஸ்துதியாக ஏற்றுக்கொண்டு. அந்தப் புண்ணியமும் சிசுபாலனைச் சேர வழி செய்தான் கண்ணன். காலம் கடந்தால் அவன் மேலும் பாவம் செய்துவிடுவான். அதோடு அவன் மோட்சம் செல்லும் தகுதி பெற புனிதமான இடத்தில் உயிர் நீக்க வேண்டும். புனிதமான ஆயுதத்தால் மடிய வேண்டும். மகா சுதர்சனம் அவன் சிரத்தை அறுக்க, அவன் உடல் ராஜசூயமான பூமியில் விழ அந்தப் புண்ணிய பலனால், அவன் ஆன்மா மோட்சமடைந்தது. தீமைக்கும் நன்மை செய்யவே யாக பூமியை யுத்த பூமியாக்கி சிசுபாலனை மோட்சம் அடையச் செய்தான் கண்ணன்.