சித்தானந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் ரங்கசாமி பங்கேற்பு

201601300218592861_Cittanantacami-Temple-consecrated-Rangaswamy-Participation_SECVPF

புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

கும்பாபிஷேகம்

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தில் சித்தானந்தசாமி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 24-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் யாகசாலை பூஜைகள் நடந்தன.

நேற்று அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகபூஜை நடந்தது. காலை 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 8 மணிக்கு மூலஸ்தான விமானம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள் விமானம் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் வைத்திய நாதன், கல்யாணசுந்தரம், புதுச்சேரி இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சுந்தரவடிவேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் தில்லைவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு குரு சித்தானந்த சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சித்தானந்தசாமி கோவிலில் விசேஷ நாட்களிலேயே மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கம். இதற்கிடையே நேற்று நடைபெற்ற சித்தானந்தசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை காண பக்தர்கள் ஏராளமானோர் காலையிலேயே வந்தனர். அவர்களின் பாதுகாப்புக்கு குறைந்த அளவிலேயே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply