சிவகெங்கை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை. வங்கிச் செயலாளர் தலைமறைவு?

bank robசிவகங்கை அருகே நேற்று முன் தினம் இரவு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியி சுமார் 400 பவுன் தங்க நகைகள் மர்ம கும்பல் ஒன்றினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள அதப்படக்கி என்ற கிராமத்தில் கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களுடைய தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியின் காவலரான குமார் கடந்த சனிக்கிழமை இரவு தனக்குப் பதில் தனது தந்தையை காவலுக்கு வைத்துவிட்டு போய்விட்டார்.

இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்து தூங்கிக் கொண்டிருந்த வங்கிக் காவலாளியை கட்டிலோடு சேர்ந்து கயிற்றால் கட்டி போட்டுவிட்டு வங்கிக்குள் சென்றனர். கதவு, பாதுகாப்புப் பெட்டகம் என எதையும் உடைக்காமல் அவற்றின் பூட்டை சாவியால் திறந்து 400 பவுன் நகைகளை மிக எளிதில் கொள்ளையடித்து விட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.

வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்கள் குறித்த அடையாளம் தெரியவில்லை என்றும் வங்கியில் உள்ள அலாரம் ஒலிக்காமல் இருக்க அதன் வயரை கொள்ளையர்கள் துண்டித்துள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளை குறித்த தகவல் அறிந்ததும் வங்கித் தலைவர் திருநாவுக்கரசு வங்கிக்கு வந்து பார்வையிட்டு பின்னர் காளையார்கோவில் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வங்கியின் செயலாளர் வேலு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் துரை கூறியதாவது:

நகைகளை கொள்ளையடித்தவர்கள் வங்கி பற்றி நன்கு அறிந்த நபர்களாகவே இருக்க வேண்டும். வங்கிச் செயலாளர் வேலுவை தேடி வருகிறோம். இரவு காவல் பணியில் ஈடுபட்ட அதிகாரி, அவரது மகன் குமார், வேலு மனைவி தவமணி ஆகியோரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாள்களில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றார்.

Leave a Reply