நமக்கான துறை இதுதான் என்கிற தீர்க்கமான முடிவும், அதன் மீதான முழு ஈடுபாடும் இருந்தா போதும்… உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஜெயிக்க முடியும்!” என்று மிக நிதானமாக… அதேசமயம், திடமான வார்த்தைகளை உதிர்க்கிறார் கீதா சத்தியமூர்த்தி. சும்மாவா… பலராலும் பயத்துடன் பார்க்கப்படும் ஆப்பிரிக்க கண்டத்தில் அல்லவா பிசினஸ் செய்துகொண்டிருக்கிறார்!
சிவகங்கையை பூர்விகமாகக் கொண்ட கீதா, பிறந்தது… வளர்ந்தது… மும்பையில். ஆனால், தற்போது கென்யா நாட்டில். ‘வைல்ட் லைஃப் சஃபாரி’ எனப்படும் வன சுற்றுலா, ஆப்பிரிக்கா நாட்டுக்குள் டூர்கள், இந்தியா, தெற்கு ஆசியா என உலக நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் ரூம் புக்கிங் என பல சர்வீஸ்கள் செய்யக்கூடிய டிராவல் ஏஜென்ஸியை, ‘கேட்டலிஸ்ட்’ (Catalyst) என்கிற பெயரில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தாய்நாடு வந்திருந்த கீதாவை, சென்னையில் சந்தித்தபோது…
”என்னோட தாத்தா, மும்பையில ‘சவுத் இண்டியா வெல்ஃபேர் ஸ்கூல்’ நிர்வாகி. அங்கதான் நானும் படிச்சேன். டெல்லியில, பி.எஸ்சி., மேத்ஸ் படிச்சேன். கல்யாணத்துக்கு முன்னயே இவரை (கணவர் சத்தியமூர்த்தி) எனக்குத் தெரியும். இவர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். திடீர்னு இவருக்கு ஆப்பிரிக்காவுல வேலை கிடைக்க, இந்தியா திரும்பி வர்றதுக்கு நாலு வருஷம் ஆகும்னு, அவசரமா கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இதுல ஒரு சுவாரஸ்யம் என்னன்னா… கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்பிட்டல்ல பிறந்திருக்கோம்… ஒரே ஸ்கூல்ல படிச் சுருக்கோம்னு!” என்று ‘குஷி’ திரைப்படத்தை நினைவுபடுத்தியவர், தனக்குள் சிரித்தார்.
”75-ம் வருஷத்துல கல்யாணமாகி, 22 நாள்ல டான்ஸானியாவுக்கு போயாச்சு. அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டினு கூட்டுக் குடும்பமா இருந்த நான், எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணினேன். இப்ப மாதிரி, நெனச்ச நேரத்துல போன்கூட பண்ண முடியாது அந்தக் காலத்துல. எத்தனை கஷ்டத்தை அனுபவிச்சுருப்பேன் பாருங்க” என்று கணவரைப் பார்த்தவர், தொடர்ந்தார்…
”பொதுவா இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு வேலைக்குப் போனவங்களோட மனைவிகள், டீச்சர் வேலைக்குத்தான் போனாங்க. ஆனா, கத்துக் கொடுக்கறதைவிட, கத்துக்கறது ரொம்பப் புடிக்கும்ங்கிறதால… முதல் வேலையா சமைக்கக் கத்துக்கிட்டேன். வேற என்ன கத்துக்கலாம்னு இருந்த சமயத்துலதான் ‘ஐ.ஏ.டி.ஏ.’ (IATA-lnternational Air Transport Association) பயிற்சி பற்றிக் கேள்விப்பட்டு, அதுல சேர்ந்தேன்.
படிச்சு முடிச்ச பிறகு… ‘வொர்க் பெர்மிட், பிராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இருந்தா தான் வேலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதுக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்குமோனு யோசிச்சிட்டிருந்தேன். ‘ஏர் இண்டியா’வுல வேலை செய்துட்டிருந்த நண்பர் சிப்பி, ‘படிச்சு முடிச்சுட்டு ஏன் சும்மா இருக்கே? எங்க ஆபீஸுக்கு வா. இங்க உனக்கு வேலை தர முடியாதுன்னாலும், டிராவல் ஏஜென்ஸி தொழில் பத்தின நெளிவுசுளிவுகளை நேரடியா கத்துக்கறதுக்கான வாய்ப்புகளை வாங்கித் தர்றேன்’னு சொன்னார். அங்க போய் நிறைய கத்துக்கிட்டேன். படிப்புக்கும், அனுபவத்துக்குமான வித்தியாசத்தையும் உணர்ந்தேன்” எனும் கீதா, இதற்கிடையில் ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார்.
”கணவருக்கு கென்யால வேலைக்கான அழைப்பு வந்துச்சு. 15 வருஷமா இருந்த டான்ஸானியாவை விட்டு, கென்யாவுக்கு வந்துட்டோம். அவர் வேலைக்கும், பசங்க ஸ்கூலுக்கும் போன பிறகு… நிறைய நேரம் கிடைச்சுது. கணவரோட நண்பர் ஒருத்தர், வெளியூர் போக டிக்கெட் புக் பண்ணிக் கொடுக்கச் சொன்னார். அவருக்கு புக் பண்ணிக் கொடுக்க ஆரம்பிச்சு, நண்பர்கள், அக்கம்பக்கத்துல இருக்கறவங்கனு நிறைய பேர் வெளியூருக்கு டிக்கெட் போடணும்னா, என்கிட்ட வர ஆரம்பிச்சாங்க. அப்பதான், ‘இதையே ஒரு தொழிலா எடுத்துப் பண்ணக்கூடாதா?’னு கணவர் கேட்டார். படிப்போட… அனுபவமும் இருந்ததால, வொர்க் பெர்மிட் வாங்க முடிஞ்சுது. 92-ம் வருஷம் வீட்டுலயே சின்ன இடத்துல டிராவல் ஏஜென்ஸியை ஆரம்பிச்சுட்டேன்” என்ற கீதா, இந்தத் தொழிலில் தான் சந்தித்த த்ரில்லிங் அனுபவத்தையும் சொன்னார்.
”ஆப்பிரிக்காவுல வழிப்பறி, கொள்ளை எல்லாம் சர்வசாதாரணம். பிசினஸ் பண்ற இடத்துல கூலா நுழைஞ்சு கொள்ளை அடிப்பாங்க. தொழில் ஆரம்பிச்சு நாலாவது வருஷம், ஒரு சனிக்கிழமை மத்தியானம். எங்க ஆபீஸ்ல பெயின்ட்டிங் வேலை நடந்துட்டு இருந்துச்சு. அப்ப ஒரு லேடி உள்ள வந்தா, பின்னாடியே உயரமா ஆறு பசங்க வந்து என் தலையில துப்பாக்கியை வெச்சு, ‘டிக்கெட் எல்லாம் கொடு’னு கேட்டாங்க. அப்போ எல்லாம் கம்ப்யூட்டரைஸ்டு டிக்கெட் கிடையாது. எல்லாம் பாதுகாப்பா லாக்கர்ல இருந்துச்சு. அதை திறக்கச் சொல்லி மிரட்டினவங்க… தரதரனு இழுத்துட்டு போய், ஒரு டேபிள் மேல என்னோட தாடையை இடிச்சு ஒரே ரகளை பண்ணிட்டாங்க. அந்த நேரத்துல அங்க வந்த தோழி ஒருத்தி, சட்டுனு சுதாரிச்சு வெளியில ஓட… போலீஸ் வந்துடுமோங்கற பயத்துல, திருடன்களும் ஓடிட்டாங்க.
கொஞ்ச நேரத்துக்கு எனக்கு பேச்சே வரல. வீட்டுக்கு போய், ‘இனி எனக்கு தொழிலெல்லாம் வேண்டாம்’னு கணவர்கிட்ட ஒரே அழுகை. ‘இதெல்லாம் சாதாரண விஷயம். உன்னோட நாலு வருஷ உழைப்பை, நாலு நிமிஷத்துல தூக்கிப் போட்டுடாதே’னு தைரியம் கொடுத்தார். மறுநாளே மறுபடியும் விறுவிறுப்பா என்னோட ஆபீஸுக்குப் போயிட்டேன். அந்த சனிக்கிழமை தொடங்கி… இன்னிக்கு வரை எத்தனையோ சவால்கள், ஏற்ற, இறக்கங்கள், இக்கட்டான சூழ்நிலைகளை சந்திச்சபோதும், தொழிலைவிட்டு வெளியில வரணும்னு நினைச்சதே இல்ல. ஒவ்வொரு பிரச்னையின்போதும் இன்னும் தைரியமானவளா என்னை வார்த்துக்கிட்டே இருக்கேன். எந்த தொழிலையும், எங்கேயும் செய்யலாம். அதில் நேர்மையும் வெளிப்படையான தன்மையும் இருந்தா, நீடிச்சு… நிலைச்சு நிற்கவும் முடியும்… வெற்றிகரமா சம்பாதிச்சு சாதிக்கவும் முடியும்!”
– அனுபவ வார்த்தைகளை அமைதியாகச் சொல்லி முடித்தார் கீதா.
பெண்கள் கையிலெடுக்க யோசிக்கும் டிராவல்ஸ் துறையில், அதுவும் அந்நிய நாட்டில், 22 வருடங்களாக வெற்றிகரமாக பிசினஸ் செய்யும் கீதா சொன்னால், சரியாகத்தானே இருக்கும்!