சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கல் உப்பு பூஜை!

LRG_20150728102726205046

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஏற்கனவே இருந்த பூஜை பொருளான வெண்ணெய் எடுக்கப்பட்டு, நேற்று முதல், கல் உப்பு வைத்து பூஜை நடக்கிறது.காங்கேயம் அடுத்த சிவன்மலை, மலை மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற ஸ்தலமும், இம்மலை சிவன் வடிவத்தில் உள்ளதால் இதை சிவன்மலை என்றழைக்கின்றனர்.இக்கோவிலில், ஆண்டவர் உத்தரவு என எழுதப்பட்ட கண்ணாடி பேழை உள்ளது. இப்பேழையில், குறிப்பிட்ட பொருள் வைத்து தினமும் பூஜை செய்யப்படும். அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருளினால், சமுதாயத்தில் தாக்கம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதாவது பக்தர் ஒருவர், சிவன்மலை ஆண்டவர் கனவில் வந்து சொன்னதாகக் கூறி, ஒரு பொருளை கொண்டு வந்து தருவர். அப்பொருளை தேவஸ்தான ஊழியர்கள் பெற்று சுவாமி சன்னிதியில் வைத்து பூ கேட்பர். வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே அப்பொருள் கண்ணாடி பேழையில் வைத்து தினமும் பூஜை செய்யப்படும். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொங்கூரைச் சேர்ந்த சிவராம், 47, என்ற விவசாயியின் கனவில், ஆண்டவர், கல் உப்பு வைத்து பூஜிக்க பணித்துள்ளார். இதுபற்றி கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், தற்போது வைக்கப்பட்டுள்ள கல் உப்பு காரணமாக, உப்பு விலை ஏற்றம் உருவாகலாம். மேலும் கடுமையான உப்பு தட்டுப்பாடு ஏற்படவும், உப்பு சம்பந்தமாக நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

முருகன் சொன்னார்: விவசாயி சிவராம் கூறியதாவது:கடந்த வைகாசி, 31ம் தேதி, முருகப்பெருமான் கனவில் வந்து, சிவன்மலை கோவிலில் கல் உப்பு வைத்து பூஜை செய் என்று கூறினார். நான், அந்த உத்தரவை சரியாக பின்பற்றவில்லை. மீண்டும் ஆடி, 4ம் தேதி, கனவில் முருகப்பெருமான் தோன்றி, உடனடியாக பூஜையில் உணவு உப்பான கல் உப்பு வைத்து பூஜை செய் என்று மட்டும் கூறி மறைந்தார்.உடன், சிவன்மலை கோவிலுக்கு சென்று, நடந்த விவரத்தை சொன்னேன். அதன்படி, கல் உப்பு பாக்கெட் கொடுத்தேன். தற்போது ஆண்டவர் உத்தரவு பேழையில், கல் உப்பு பாக்கெட் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply