இலங்கை தமிழ் எம்.பி கொலையில் திடுக்கிடும் திருப்பம். ராஜபக்சேவின் ஆலோசகர் கைது.
இலங்கை தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யாக இருந்த 71 வயது ஜோசப் பரராஜசிங்கம் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதியன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின் போது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று கருணாவின் தலைமையிலான அணியினரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் , ஆலோசகராகவும், கிழக்கு மாகாண முதல்வராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் இருந்த சந்திரகாந்தன் சதியால்தான் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.
இந்த கொலை நடந்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நேற்று தலைநகர் கொழும்புவில் சந்திரகாந்த்தை, அதிரடியாக இலங்கை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்திரகாந்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திரகாந்தனுடன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும், விரைவில் இந்த கொலை குறித்த மர்மங்கள் விலகும் என்றும் இலங்கை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.