காங்கேயம் : சிவன்மலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில், வெண்ணெய் வைத்து வழிபடுவது, நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை, மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னிதானத்தில், ஆண்டவர் உத்தரவு என, எழுதப்பட்ட கண்ணாடி பேழை உள்ளது. இதில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளால், சமுதாயத்தில் தாக்கம் ஏற்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.பக்தர் ஒருவர் கனவில், சிவன்மலை ஆண்டவன் வந்து, குறிப்பிட்ட பொருளை வைத்து, தன்னை வழிபட அருளுவார். இதுபற்றி, தேவஸ்தான நிர்வாகத்திடம் பக்தர் கூறியதும், சுவாமி சன்னிதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ விழுந்தால் உத்தரவு கொடுத்ததாக முடிவு செய்து, அந்த பொருளை கண்ணாடி பேழையில், தினமும் வைத்து பூஜை செய்கின்றனர்.அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருளால், தேசிய அளவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த, 100 ஆண்டுகளாக, இவ்வாறு வழிபடுவது வழக்கமாக உள்ளது.
மற்றொரு பக்தர் கனவில், வேறு பொருளை, ஆண்டவன் கூறும் வரை, ஒரே பொருள் பூஜையில் தொடரும். சில பொருட்கள், சில நாட்களிலும், சில வாரங்களிலும் மாற்றப்பட்டுள்ளது. ஓர் ஆண்டுக்கு மேலும் கூட, ஒரு பொருள் பூஜையில் வைக்கப்பட்டதும் உண்டு.பால் போன்ற பொருட்கள் தினமும் மாற்றி வைக்கப்படும். மண், வெல்லம், அரிசி போன்றவை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படும்.ஆற்று மணல் வைத்து பூஜை செய்தபோது, மணல் விலை உயர்ந்தது. மஞ்சள் வைத்து பூஜை செய்தபோது, அதன் விலை உச்சத்தை தொட்டது. சைக்கிள் வைத்து பூஜை செய்தபோது, அதன் பயன்பாடு குறைந்தது. தண்ணீர் வைத்து பூஜித்தபோது, சுனாமி வந்தது. அரிசி வைத்து பூஜை செய்தபோது, வறட்சி ஏற்பட்டு, அரிசி விலை உயர்ந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். கடந்த, டிச., 23ம் தேதி முதல், பால் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம், சிவன்மலை கிராமம், மலை அடிவாரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற பக்தரின் கனவில் வந்த ஆண்டவன், வெண்ணெய் வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டார். ஆண்டவனிடம், பூ அனுமதி கேட்டு, நேற்று காலை, கண்ணாடி பெட்டியில் இருந்த பால் அகற்றப்பட்டு, வெண்ணெய் வைத்து பூஜை செய்வது துவங்கியது. இதுபற்றி, சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், இங்கு வைக்கப்பட்டுள்ள பொருளின் காரணமாக, பல் வேறு நன்மை, தீமை ஏற்பட்டுள்ளது வெண்ணெய் விலை உயரலாம் என்றார்.