ரூபாய் நோட்டு வாபஸ் சரியான முடிவுதான். ஆனால்…பிரபல காங்கிரஸ் தலைவர்
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு சுமார் 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் நாட்டில் ரூபாய் நோட்டு பற்றாக்குறை நீங்கவில்லை. பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை. இந்த நிலைமை எப்போது சரியாகும், இந்த திட்டத்தில் என்ன குறைபாடு என்று பலரும் அலசி வருகின்றனர்.
இந்நிலையில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது சரியான நடவடிக்கைதான்; ஆனால், போதிய முன்னேற்பாடுகள் இன்றி தவறான முறையில் இந்தத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த சரியான முடிவே. எனினும், பணம் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசு சரியான முறையில் முன்னேற்பாடுகளைச் செய்யாததால், பணம் எடுப்பதற்காக, வங்கி வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
அதேசமயம், கருப்புப் பணப் பதுக்கல்காரர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் புதிய ரூ.2,000 நோட்டுகள் கைப்பற்றப்படுகின்றன.
கருப்புப் பணம் வைத்திருக்கும் பெரும்பாலானோர், அவற்றை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு வழியில் முதலீடு செய்திருப்பார்கள். எனவே, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற பிறகு, கருப்புப் பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்துவிடும் என்பது தவறான கருத்தாகும்.