தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த சிவசேனா. மகாராஷ்டிராவில் பரபரப்பு

தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த சிவசேனா. மகாராஷ்டிராவில் பரபரப்பு
meat ban
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினர் வரும் 10, 13, 17, 18 ஆகிய தேதிகளில் உண்ணாவிரத நோன்பு இருந்து பண்டிகை கொண்டாட உள்ளனர். ஜெயின் சமூகத்தினர்களின் இந்த பண்டிகையை முன்னிட்டு இந்த 4 நாட்களிலும் இறைச்சி, மீன் விற்க கிரேட்டர் மும்பை, யாந்தர், நவி மும்பை ஆகிய மாநகராட்சிகள் அதிரடியாக தடை விதித்தது. இதற்கு பிற மதத்தினர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு வந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக. கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி மற்றும் ராஷ்டிரா நவநிர் மாண் கட்சி ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி மாநகராட்சிகளின் தடையை மீறி இறைச்சி விற்க இரு கட்சிகளும் முடிவு செய்து, பரபரப்பான தாதர் பகுதியில் தற்காலிக கடைகள் போட்டு இறைச்சிகள் செய்தனர். ராஜ் தாக்கரே தலைமையிலான எம்என்எஸ் கட்சி தொண்டர்களும் கோழிக்கறி விற்பனைக்கான கடைகளை பல இடங்களில் திறந்துள்ளனர். மாநகராட்சி ஒட்டியிருந்த தடை ஆணையை சிவசேனா தொண்டர்கள் கிழித்தெறிந்தும், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் பல தெருக்களில் நேற்று போராட்டங்கள் நடத்தினர்.

வரும் 2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது ஜெயின் சமூகத்தினரின் ஓட்டுகளை பெறவே பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிவசேனா, எம்என்எஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன

இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியபோது, ‘‘இறைச்சி விற்பனைக்கு தடை இல்லாமல் பார்த்து கொள்ளப்படும்’’ என்று உறுதி அளித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்ற எம்என்எஸ் மூத்த தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், ‘‘சிவசேனா தொண்டர்களுடன் சேர்ந்து தாதர் பகுதியில் நாங்கள் இறைச்சி விற்பனை செய்கிறோம். திடீரென போலீஸார் வந்து கடைகளை மூடச் சொல்லி நிர்பந்தப்படுத்தினர். அதன்பிறகு எங்களை கைது செய்தனர். இறைச்சி விற்பனைக்கான தடையை ரத்து செய்யும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.

Leave a Reply