உளறுகிறார் மோடி, வாய்க்கு வந்தபடி பேசும் பாஜகவினர்: சிவசேனா விளாசல்

உளறுகிறார் மோடி, வாய்க்கு வந்தபடி பேசும் பாஜகவினர்: சிவசேனா விளாசல்

பிரதமர் மோடி அடிக்கடி உளறுவது போலவே அவரது கட்சியின் எம்.பி.க்களும் அவரை பின்பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதாக சிவசேனா கட்சி பாஜகவினர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி எம்.பி.க்களுக்கு சமீபத்தில் அறிவுரை கூறினார். யாரும் பொறுப்பற்ற முறையில் பேசாதீர்கள், வீணாகப்பேசும் வார்த்தைகள் ஊடகங்கள் செய்திக்கு மசாலா சேர்த்தது போன்று அமைந்துவிடுகிறது. இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் கட்சியின் மரியாதையான தோற்றம் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ஆனால், இதுபோன்ற அறிவுரைகளைப் பிரதமர் மோடி இதற்கு முன் தனது எம்.பி.க்களுக்கு பல முறை கூறியிருக்கிறார். ஆனால், அவர்கள் தொடர்ந்து இதுபோல் செய்து வருகிறார்கள். பாஜக எம்.பி.க்கள் தங்களின் சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே சிறிதுகூட ஆய்வுசெய்யாமல் பேசி விடுகிறார்கள்.

அவர்கள் என்ன செய்வார்கள், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடி பேசுவதைப் பார்த்து, அவரைப் பின்பற்றி அப்படியே பேசுகிறார்கள். அதாவது, பிரதமர் மோடி தனது சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ, அதை ஆய்வு செய்யாமல் பேசுகிறார், அதைப்போலவே எம்.பி.க்களும் பேசுகிறார்கள்.

மோடியின் பேச்சு இன்னும் ஊடகங்களின் செய்திக்கு மசாலா சேர்ப்பதுபோன்று தான் இருக்கிறது. இப்போது, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ஊடகங்களுக்குக் கூடுதல் மசாலாவும், ஊறுகாயும், அப்பளமும் தருகிறார்கள்.

நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து மத்திய அமைச்சர் சந்தோஷ் கெங்வார் பொறுப்பற்று பேசியுள்ளார். ‘இரண்டு பலாத்கார சம்பவங்களை எல்லாம் பெரிதாக்காதீர்கள். இந்தியா மிகப்பெரியநாடு’ என அவர் தெரிவித்திருக்கிறார். ஏன் இதுவரை அவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்சியும் கோரவில்லை. அமைச்சர் கெங்வாரின் கருத்து பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கிறது.

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது, அங்கு உள்துறை அமைச்சராக இருந்த ஆர்.ஆர். பாட்டீல், இதுபோன்ற சிறிய சம்பவங்கள் பெரியநகரத்தில் நடக்கத்தான் செய்யும் என்று தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு பெரும் கண்டனம் எழுந்து, இறுதியில் பாட்டீல் பதவியில் இருந்து விலகினார்.

அதேபோலத்தான் அமைச்சர் கெங்வாரின் பேச்சும் தீவிரமானது. இன்னும் பதவியில் இருக்கும் அவரை, பெண்களை இழிவுபடுத்தியதற்காக நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply