பாகிஸ்தானை ஆதரித்தால் சுதீந்திர குல்கர்னி நிலைதான் ஏற்படும். சிவசேனா எச்சரிக்கை

பாகிஸ்தானை ஆதரித்தால் சுதீந்திர குல்கர்னி நிலைதான் ஏற்படும். சிவசேனா எச்சரிக்கை
uttav
சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி எழுதிய ‘பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் என் பார்வை பருந்தோ, புறாவோ அல்ல‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்த பா.ஜனதா முன்னாள் பிரதிநிதியும், ஒ.ஆர்.எப். அமைப்பின் தலைவருமான சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா கட்சியினர் கருப்பு மை பூசிய விவகாரம் பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் சுதீந்திர குல்கர்னி நிலைமைதான் ஏற்படும் என சிவசேனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவசேனா கட்சி சார்பில் நேற்று மும்பையில் நடைபெற்ற தசரா பொதுக்கூட்டத்தில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ”மகாராஷ்டிர கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகாது. உங்களால் (பா.ஜ.க.) ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத்துடன் இணைந்து செல்ல முடியுபோது, நீங்கள் சிவசேனாவின் பேச்சையும் கேட்க வேண்டும். எவ்வளவு நாட்கள் ஆட்சியில் இருப்போம் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் இப்போது ஆட்சியில் உள்ளோம், எங்களுடைய பணியினை செய்ய அனுமதியுங்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் புகுந்து அப்பாவி மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்றனர். ஆனால், இன்று பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மும்பை போலீசாரால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால், போலீசாரின் மனது எந்த அளவிற்கு புண்படும் என்பது யாருக்காவது தெரியுமா? தைரியம் இருந்தால், பாகிஸ்தானுக்குள் நுழையுங்கள் பார்க்கலாம்.

முதலில் பருப்புக்கு பாதுகாப்பை கொடுங்கள், பின்னர் பாகிஸ்தானுக்கு கொடுங்கள். இன்று கசூரி மும்பை வந்து புத்தகம் வெளியிடுவார். நாளை தீவிரவாதி தாவூத் இப்ராகிம் வந்து புத்தகம் வெளியிடுவார். அதற்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பார்களா? இதையெல்லாம் சிவசேனாவால் சகித்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான சிவசேனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாகிஸ்தானுக்கு ஆதவராக யார் வந்தாலும் அவர்களுக்கும் சுதீந்திர குல்கர்னிக்கு ஏற்பட்ட நிலைமைதான் நேரிடும்” என்று எச்சரித்தார்.

English Summary: Sivasena warned to Pakistan supporters

Leave a Reply