ஓகேனக்கல்: பரிசலில் சென்றவர்கள் பலியாக செல்பி காரணமா?

ஓகேனக்கல்: பரிசலில் சென்றவர்கள் பலியாக செல்பி காரணமா?
hogenakkal
சென்னையை சேர்ந்த 6 பேர் ஒகேனக்கலில் பரிசலில் சென்றபோது பரிசல் திடீரென கவிழந்ததால் பலியான சோக நிகழ்ச்சிக்கு செல்பிதான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் கோமதி என்பவரின் திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்தினர் அனைவரும்  ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர். ஒகேனக்கல் பரிசல் துறையில் இருந்து, கஜாமுருகேசன் என்பவரின் பரிசலில் தொம்பச்சி பாறை அருகே கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் 9 பேர்களும் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பரிசலை ஓட்டியவர் உள்பட 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். உடனடியாக சுதாரித்த பரிசல் ஓட்டி கஜா முருகேசன், தண்ணீரில் மூழ்கிய ராஜேஷ், அவரது மனைவி கோமதி, அவர்களது மகன் சச்சின் ஆகியோர்களை உயிருடன் மீட்டார். ஆனால், தண்ணீரில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கவுரி, மகன் ரஞ்சித், ரஞ்சித் மனைவி கோகிலா, அவர்களது மகள் சுபிக்‌ஷா, ராஜேஷ் மகன் தர்ஷன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து போலீஸார், இந்த விபத்திற்கு செல்பி எடுக்க முயன்றதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.  பரிசலில் சென்றவர்கள் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் செல்போன் மற்றும் கேமராவில் படம் பிடித்து கொண்டிருந்தபோது, ஒருவர் மட்டும் செல்ஃபி மோகத்தால், தன் மொபைல் போனில் அருவி அருகே செல்ஃபி எடுக்க பரிசலின் ஓரத்திற்கு சென்றதாகவும், அந்த நேரத்தில் படகின் ஒரு ஓரத்தில் பாரம் அதிகமாகி திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply