சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக 6 மாத குழந்தையின் மனுதாக்கல்
சென்னை ஐகோர்ட்டின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வழக்கின் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக ஆறு மாத குழந்தை ஒன்று மனுதாக்கல் செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தீபாவளி, தசரா பண்டிகைகளின் போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுவதால் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவை ஏற்படுவதாகவும், இதனால் குழந்தைகளாக இருக்கும் எங்களது உடல் உறுப்புகள் வளர்வதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது.
எனவே அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு அவசியம். எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய குழந்தைகளுக்கு உரிமை உண்டா? என்பது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறியபோது, ‘குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் இதுதான் முதல்முறை என்று அவர் தெரிவித்தார்.