பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்திருக்கும் நிலையில், பலாத்காரம் செய்த ஸ்கேட்டிங் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் நகரில் தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை அந்த பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கொதித்தெழுந்த மாணவியின் பெற்றோர் அந்த குறிப்பிட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று உறவினர்களுடன் வந்து பள்ளியை முற்றுகையிட்ட சிறுமியின் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் அந்த இடத்தை விட்டு கலைந்து செல்லும்படி எச்சரிக்கை செய்த காவல்துறையினர் பின்னர் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் பெங்களூர் நகரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிக்கு நடந்த கொடுஞ்செயலுக்கு நீதிகேட்ட பெற்றோரை காவல்துறையினர் தடியடி நடத்திய விவகாரம் போலீஸார் மீது கடும் எதிர்ப்பை உண்டாக்கியது.
இதனால் கர்நாடக அரசு நேற்று காவல்துறை ஆணையராக ராகவேந்திர அவ்ரத்கர் அவர்களை பணிமாற்றம் செய்துள்ளது. அவருக்கு பதிலாக எம்.என்.ரெட்டி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.