ஆன்மீக துணுக்குகள்

1. புலி போன்ற உடல் அமைப்பைப் பெற்ற வியாக்ரபுரீஸ்வர முனிவர் வழிபட்டு அருள் பெற்ற தலம் தான் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயமாகும். இது புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ளது.
2. பரங்கிமலை என்பதன் உண்மையான பெயர் பரங்கி மலை அல்ல. பிருங்கி மலை என்பதே ஆகும். இறைவனிடம் பெற்ற சாபத்தினால் பிருங்கி முனிவர், பூவுலகம் வந்து தவம் செய்தார். அவ்வாறு அவர் தவம் மேற் கொண்ட மலை தான் பிருங்கி மலையாகும். அதுவே பின்னர் காலப் போக்கில் மருவி பரங்கி மலையாகி விட்டது. (வள்ளல் பாரியின் பறம்பு மலை, பிறம்பு மலையாகிப் பின்னர் பிரான்மலை ஆனது போல்).
3. சிவன் கோவில்களில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி போன்று மற்றுமொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். பைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி அன்று, வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
4. 18 சித்தர்களுக்கான கோயில், சோழவந்தான் அருகே உள்ள நாகதீர்த்தம் என்ற ஊரில் உள்ளது. சென்னையில் உள்ள மாடம்பாக்கத்திலும் 18 சித்தர்களுக்கு தனித் தனிச் சன்னதி உள்ளது.
5.  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ திருத்தளி நாதர் ஆலயம், வான்மீகிக்கு அருள் வழங்கிய தலமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரியார் போன்றோரால் பாடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. மேலும் ஈசனின் கௌரி தாண்டவம் காண மகாலட்சுமி தவம் செய்த இடமும் இதுவே. பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட் தலமும் இது தான்.
6. பகைக் கிரகங்களான சூரியனும் சனியும் நேருக்கு நேர் நட்பு நிலையில் காட்சி அளிக்கும் திருத்தலம் திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீசுவரர் திருக்கோயிலாகும்.
7. மதுரைக்கு அருகே உள்ள ஊர் திருவாதவூர். மாணிக்கவாசகர் அவதரித்த இத்திருத்தலம், வாதம் போன்ற நோய்களைத் நீக்கும் புனிதத்தன்மை உடையது. சனிபகவானின் சாபம் நீங்கிய தலமுமாக இது விளங்குகின்றது. சுயம்புலிங்கமாக விளங்கும் இத்தலத்து இறைவனின் தலையில் பசுவின் குளம்படிகள் உள்ளன.
8. திருக்கடையூர் அருகே உள்ள அனந்தமங்கலம் என்ற ஊரில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சனேயருக்கு நெற்றிக்கண் உள்ளது.  சிங்கப் பெருமாள் ஆலயத்தில் உள்ள நரசிம்மருக்கும் நெற்றிக் கண் உள்ளது.
9. கரூர் அருகே உள்ள வெண்ணெய் மலை என்ற தலத்தில் முருகன் தனியாக, வேல், மயில், வள்ளி, தெய்வானை இல்லாமல், காட்சி தருகின்றார்.
10. அய்யர் மலை. குளித்தலை அருகே உள்ள ஊர். இந்த ஊரில் எழுந்தருளியுள்ள இறைவன் தலையில் மிகப் பெரிய வடு உள்ளது. அது மன்னன் ஒருவனால் வாளால் வெட்டப்பட்டதால் எழுந்ததாகும். இறைவன் இரத்தினகிரீசுவரர் என்று வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

Leave a Reply