நாகர்கோவில்: கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ, மாணவியரின் விவரங்கள் பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் மாணவர் தகவல் தொகுப்பு மூலம் மாணவ மாணவியரின் விபரத்தை அதிகாரிகள் எந்த ஒரு கல்வி அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். அரசின் திட்டங்கள் முறையாக மாணவ மாணவியரிடம் சென்றடைந்துள்ளதா என்பது இதன் மூலம் சரிபார்க்க முடியும்.
மேலும் மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்கின்றனரா அல்லது இடையில் பள்ளி செல்லாமல் இடை நின்றுள்ளனரா என்பதும் தெரியவரும். அவர்களின் கல்வி முன்னேற்றம், உடல்நிலை, அவர்களின் சிறப்பு திறன்கள் போன்றவையும் இதன் மூலம் கண்காணிக்க இயலும். மாணவர்களின் 100 சதவீதம் சரியான விபரங்கள் இதில் இருக்கும். இந்த திட்டத்தில் தொடர்ந்து அனைத்து விபரங்களுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸ்மார்ட்கார்டு மூலமே மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.தகவல் விபர சேகரிப்பு பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.