ஒரு நூதனமான ஸ்மார்ட் போனை மோனோம் (Monohm Inc) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரன்சிபில் (Runcible ) என்ற அந்த போன் வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்டது.
ஏதோ டேபிள் வெயிட் போல் வட்ட வடிவில் இது காட்சி அளிக்கிறது. இதன் மையத்தில் காமிரா அமைந்திருக்கிறது. ஸ்மார்ட் போனில் பார்க்கக் கூடிய அலங்கார அம்சங்கள் இதில் கிடையாது.
இது அழைப்பு வந்திருக்கிறது, இமெயில் வந்திருக்கிறது என்றெல்லாம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யாது. அந்தக் காலத்து பாக்கெட் வாட்ச் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன்தான் உலகின் முதல் வட்ட வடிவிலான போன்.
நமக்கு உதவுவதற்குப் பதில், சதா சர்வகாலமும் நம் வாழ்க்கைக்குள் ஊடுருவிக் கவனத்தைச் சிதைக்கும் நவீன ஸ்மார்ட் போன்களுக்கு மாற்று இந்த ரன்சிபில் என்கிறார் நிறுவன சி.இ.ஓவான அப்ரே ஆண்டர்சன். இந்த போன் மோசில்லாவின் ஃபயர்ஃபாக்ஸ் ஓஎஸ்-ல் இயங்குகிறது.
இதன் பாகங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அப்டேட் செய்துகொண்டே இருக்கலாம் என்பதால் இது அவுட்டேட்டே ஆகாது. ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஜப்பானில் அறிமுகமாக உள்ளது.
இந்தப் புதுமை போன் பற்றி அறிய: http://mono.hm/runcible.html