பொதுமக்களிடையே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த அல்லது குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் சிகரெட்டுக்களுக்கு வரிகளை கணிசமான அளவு உயர்த்திய நிலையில் தற்போது இன்னொரு அதிரடியாக பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று ஒரு கமிட்டி சிபாரிசு செய்ததை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதுவரை பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு 200 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கல்வி நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் புகையிலை தொடர்பான பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிகளை யாரும் மதிப்பதில்லை. புகை பிடிப்பவர்களையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளூம் எடுப்பதில்லை
இந்நிலையில், மோடி அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டி, மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராத தொகையை ரூ.200ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.
மேலும், புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், உதிரியாக பீடி, சிகரெட் விற்பதற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.