சமூக வலைத்தளங்களில் சசிகலா புஷ்பா செய்திகள். டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா குறித்த அவதூறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு கொண்டிருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் அவர் தனது வழக்கறிஞர் அபினவ் மூலம் வழ்க்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்ட் நேற்று ஒரு உத்தரவை டெல்லி ஐகோர்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., பற்றிய அவதூறு செய்திகள், படங்கள் வெளியிட சமூக வலைத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஏற்கனவே அவரை பற்றி செய்திகள், படங்கள் வெளியிட்டிருந்தால் அவற்றை உடனே நீக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக சசிகலா புஷ்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எனக்கு செப்டம்பர் 19-ந் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நான் எனது அரசியல் சாசன பதவியை விட்டு விலக வேண்டும் என்று மிரட்டினார். அவ்வாறு நான் செய்யாவிட்டால், சமூக வலைத்தளங்களில் என் நடத்தையைப் பற்றி தவறான வதந்திகளையும், குற்றசாட்டுகளையும் பரப்பப்போவதாக மிரட்டினார். அத்துடன் ஏராளமான படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாகவும் அவர் எச்சரித்தார்.
இவையெல்லாம் எனது அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடிய விஷயங்கள் ஆகும். இவை எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துபவை ஆகும்.
எனவே என்னைப்பற்றிய அவதூறான செய்திகளை, வதந்திகளை, படங்களை பரப்புவதில் இருந்து சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகுள், யு டியுப், டுவிட்டர் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.