தமிழக அரசு இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாக புகுந்து மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்புகளின் ‘புராடக்ட் கீ’ என்று சொல்லப்படக்கூடிய ‘கோடு’ ரகசியங்களை திருடிய சென்னை நபர் ஒருவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிப்படிப்பை கூட முடிக்காத சென்னையை சேர்ந்த டி. பிரபு என்பவர், தன்னை எம்.பி.ஏ பட்டதாரி என்று கூறிக்கொண்டு பல தனியார் நிறுவனங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் சாப்ட்வேர்களை திருட்டுத்தனமாக இன்ஸ்டால் செய்துள்ளார்.
மேலும் இவர் தமிழக அரசுக்கு சொந்தமான இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாக சென்று, அதில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாப்ட்வேர்களின் கோடு ரகசியங்களை திருடியதோடு, அந்த இணையதளங்கள் இயங்காமல் இருக்கும்வண்ணம் சில குளறுபடிகளையும் செய்துள்ளார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பிரபுவை சி.பி.ஐ. சைபர் கிரைம் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.18 லட்சத்தையும் முடக்கினர். கைது செய்யப்பட்ட பிரபு, சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டெல்லிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் கூறியுள்ளார்.