கேரளாவில், சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனல்களை வீடுகளில் அமைத்து தருவதாக ஏராளமானோரிடம் பணம் வசூலித்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது. இதில் ஈடுபட்ட பிஜு ராதாகிருஷ்ணன் என்பவரும், சரிதா நாயர் என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர்.
அவர்களுக்கு உதவியதாக முதலமைச்சர் உம்மன்சாண்டி அலுவலக தனி உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.
இதனால், இந்த ஊழல் பெரும் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது. உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை கூட்டி, ஓர் அறிக்கையை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சரிதா நாயருடன் கேரளாவைச்சேர்ந்த ஒரு மத்திய மந்திரி, உம்மன் சாண்டி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சர், ஒரு முன்னாள் அமைச்சர் ஆகியோர் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தனர்.
இத்தகவலை, கைதான முக்கிய குற்றவாளி பிஜு ராதாகிருஷ்ணனின் வக்கீல் தெரிவித்தார். இந்த ஊழல் வெளிவருவதற்கு முன்பு, அரசு விருந்தினர் இல்லத்தில், முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் பிஜு ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் உள்ளிட்ட 3 பேர் மீதும் உம்மன் சாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை பாதுகாத்து வருகிறார். இதன்மூலம், அவர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி செயல்படுகிறார்.
3 பேர் தொடர்புடைய வீடியோ படங்கள் வெளிவருவதற்கு முன்பு, அவர்கள் மீது உம்மன் சாண்டி நடவடிக்கை எடுத்தால் நல்லது. இந்த விவகாரத்தில் பொதுமக்களையும், விசாரணை அதிகாரிகளையும் தவறாக வழி நடத்தியதற்காக உம்மன் சாண்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அச்சுதானந்தன் கூறியுள்ளார்.