திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று பழங்கள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் திரிபலா. அந்த மூன்று மூலிகைகள்: கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis).
திரிபலாவின் உதவி
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு. உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தைப்போல் எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது.
திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.
தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்தச் சூரணத்தைத் தடவிவந்தால் விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது.
காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில் சாப்பிடச் சில மணி நேரத்தில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
கடுக்காய்
கடுக்காயை ஹரீதகி என்று அழைப்பார்கள். இதற்கு விஜயா, அமிர்தா, காயஸ்தா, ஹேமவதி, பத்யா, சிவா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. பிராணனை அளிக்க வல்லதால், இதனைப் பிராணதா என்றும் அழைப்பார்கள்.
அறுசுவையில் உப்பைத் தவிர்த்துத் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையைச் சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகிணி, திருவிருதுதம். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றைப் பொறுத்துக் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.
கபவாதங்களைத் தணிப்பதில் சிறந்தது, மூல நோய்க்குச் சிறந்தது. பசியைத் தூண்டுவது, அக்னியை அதிகரிக்கச் செய்வது. புண்களை ஆற்றுவது, மலபந்தத்தை அகற்றுவது. நாட்படப் பயன் படுத்தினால் சற்று ஆண்மை குறைவை ஏற்படுத்தலாம். இதில் செய்கிற முக்கியமான மருந்துகள் தசமூல ஹரீதகி, அகஸ்திய ரசாயனம் போன்றவையாகும். உடலில் வீக்கம், பாண்டு, குல்மம் போன்ற நோய்களுக்கு இது சிறந்தது.
வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும். கடுக்காய் பொடியுடன் எள் சேர்த்துச் சாப்பிட, குஷ்டங்கள், விரணங்கள் மாறும். கொழுப்பை நீக்கும் தன்மை உடையது.
ஜீரணச் சக்தி அதிகரிப்பு, அறிவு சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகிய குணங்கள் இதற்கு உண்டு. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல் வியாதியைக் குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களைப் போக்குதல், சுவாச நோய்களைக் கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களைக் கடுக்காய் தருகிறது.
மூன்று கடுக்காய்த் தோலை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்துத் துவையலாக அரைத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்துக் கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின் அதிகாலையில் குடித்தால், நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
மூக்கிலிருந்து ரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.10 கிராம் வீதம் கடுக்காய்த் தூள், காசுக்கட்டித் தூள் சேர்த்த சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப் புண், உதட்டுப் புண்ணில் பூசிவரப் புண்கள் ஆறும்.
நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்று வலி, குஷ்டம், இளைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப் படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.