ஆமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சோம்நாத் சிவன் கோவிலில், இந்து அல்லாத பிற மதத்தினர் முன் அனுமதி பெற்றே நுழைய வேண்டும் என, கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, கோவில் அறக்கட்டளை செயலரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பி.கே.லஹிரி கூறியதாவது: பாதுகாப்பு கருதி, கோவிலுக்கு வருவோரை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும், யார், யாரை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பதில், பாதுகாவலர்கள் பிரச்னையை சந்திக்கின்றனர். பர்கா அணிந்த ஒரு பெண், கோவிலுக்குள் நுழைய முயன்றதாக சிலர் கூறுகின்றனர். அதனால், இந்து அல்லாத பிற மதத்தவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கும் முன், சோதனை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்களில், இந்துக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. பார்சி அகியாரிக்கு, பார்சி அல்லாதவர் செல்ல முடியாது. அதுபோல், மெக்கா நகரில் இந்துக்கள் நுழைய முடியாது.தற்போது எடுத்துள்ள முடிவு புதிது அல்ல. இந்துக்களின் பாரம்பரிய நடைமுறையைத் தான் கொண்டு வந்துள்ளோம்.இந்துக்கள், பாகுபாடின்றி கோவிலுக்குள் நுழைய, அரசியல் சட்டம் வழி வகுத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.