சோனியாவும் குஷ்புவும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். H.ராஜா பேச்சு

h.rajaஇந்தியாவுக்கு எதிராக கலாச்சாரத்தில் ஒரே கருத்தையுடைய சோனியாவும், குஷ்பூவும் இணைந்ததில் எவ்வித தவறும் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் H.ராஜா கூறியுள்ளார்.

நேற்று காரைக்குடி அருகே உள்ள சிறாவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என  வலியுறுத்தி பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அவர்களுடைய மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய H.ராஜா “தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்தற்கு, பா.ஜ.க.வையும், மோடியையும் தமிழக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் பதினெட்டு நாட்களில் மோடியின் முயற்சியால் அந்த மீனவர்கள் விடுவிக்கபட்டு தாயகம் திரும்பி உள்ளனர். இந்தியாவில் யாரும் செய்யாத செயலை மோடி அரசு செய்து காட்டியது. இது வரலாற்று சம்பவம். மோடியை விமர்ச்சித்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் பதிமூன்று குழந்தைகள் இறந்துள்ளன. தமிழகம் முழுவதும் இதேபோன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து வருகின்றனர். அது வெளியே தெரியாமல் உள்ளது. கர்ப்ப காலத்தில் 30 கிலோவிற்கும் குறைவாக எடை உடைய பெண்களுக்கு பிரசவ காலத்தில் குழந்தை இறக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு ஊட்டசத்து குறைபாடு உடைய தாய்மார்களுக்கு அளிக்கபட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

முந்தைய தமிழக அரசு சேதுசமுத்திர திட்டத்தில் செலவு செய்த தொகையில், வெறும் மண் மட்டும் அள்ளி இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். நிதின்கட்கரி அமைச்சகம் சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்தும். சேது சமுத்திர திட்டத்தை இந்துகளின் பண்பாட்டை சிதைக்கும் வகையில் மன்மோகன் சிங் அரசு பாதை அமைத்தது. ஆனால் பா.ஜ.க. அரசு புதிய பாதையில் இதனை கொண்டு செல்லும்” என்றார்.

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜா, “கல்யாணத்திற்கு முன்பே உறவு வைத்து கொள்ளலாம் என்று கூறிய குஷ்பூவும் ஆணும், ஆணும் உறவு வைத்து கொள்வது தப்பில்லை என்று கூறிய சோனியாவும் இணைந்தது தப்பில்லை” என்றார்.

Leave a Reply