தோல்விக்கான காரணங்கள் குறித்து சுயபரிசோதனை செய்வோம். சோனியா காந்தி அறிக்கை
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி தவிர மீது நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் மிகவும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் மட்டும் கூட்டணி கட்சியான திமுக துணையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலவாசிகளின் தீர்ப்பை மிகப் பணிவுடன் ஏற்கிறோம். இந்த தேர்தலில் நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய வாக்காளர்கள் மற்றும் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஆட்சி அமைக்க மெஜாரிட்டி அளித்த புதுச்சேரி மக்களுக்கும் நன்றி.
எங்கள் தோல்விக்கான காரணங்கள் மீது சுயபரிசோதனை செய்வதுடன், அதை சரிசெய்து பொதுமக்களுக்கு புதியவேகத்துடன் சேவை செய்வோம்.
வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு எனது வாழ்த்துக்களை வழங்குகிறேன். இவர்கள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை தொடர்ந்து வழங்குவதை தங்கள் முக்கியக் அரசியல் குறிக்கோளாக இருக்கட்டும். எனத் தெரிவித்துள்ளார்.