வியரபிள் அணி கணினிகள்தான் (wearable computers) தொழில்நுட்ப உலகின் அடுத்த கட்டம் எனும் கருத்து நிலவுகிறது. ஸ்மார்ட் வாட்ச் இந்தப் பிரிவில்தான் வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சோனியும் பரபரப்பு ஏற்படுத்தும் விதத்தில் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மின் காகித நுட்பத்தின் அடிப்படையில் சோனி ஸ்மார்ட் வாட்ச் இ-பேப்பரை உருவாக்கியுள்ளது. சத்தம் இல்லாமல் இந்த வாட்சின் வெள்ளோட்டத்தையும் விட்டுள்ளது. இந்த வாட்சுக்கான வரவேற்பை அறிந்துகொள்வதற்காக சோனியின் பெயர் குறிப்பிடாமல் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அப்படியிருந்தும் கேட்ட நிதிக்கு மேல் இந்தத் திட்டத்துக்குக் கிடைத்துள்ளதாகவும் சோனி நிறுவன அதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அணி கணினி பிரிவில் சோனிக்கு பெரிய அளவில் ஆர்வம் இருப்பதாகவும் பேஷன் துறை சார்ந்து இத்தகைய தயாரிப்புகளை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாட்சின் சந்தைப் பிரவேசம் பற்றி சோனி எதுவும் கூறவில்லை. ஆனால் நிதி திரட்டும் தளத்தில் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்தில் வாட்ச் கிடைக்கும்.