தென்கொரிய தேர்தல் முடிவால் அமெரிக்காவுக்கு பின்னடைவா?
தென் கொரிய அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூன் ஜே இன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்கொரியாவின் அதிபராக இருந்த பார்க் குன் ஹை மற்றும் அவரது தோழி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் தென்கொரிய அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை முதல் வெளியாக தொடங்கின. இந்த முடிவின்படி 41.08 சதவீத வாக்குகள் பெற்று ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூன் ஜே இன் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை 24.03 சதவீத வாக்குகள் பெற்ற கொரிய சுதந்திர கட்சி வேட்பாளர் ஹாங் ஜுன் ப்யோவும் ,மூன்றாவது இடத்தை 21.41 சதவீத வாக்குகளுடன் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆன் சியோல் சூவும் பிடித்துள்ளனர்.
வடகொரியாவும் தென்கொரியாவும் இதுவரை எலியும் பூனையுமாக இருந்த நிலையில் புதிய அதிபர் வடகொரியாவுடன் அமைதி பேச்சில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதை அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே கூறியிருந்தார். மேலும் மூன் ஜே இன், அமெரிக்காவின் எதிர்ப்பாளர் என்பதால் டிரம்ப் எடுக்கும் வடகொரியா மீதான தாக்குதலுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தல் முடிவு அமெரிக்காவுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.