8 வயது மகளை சூட்கேசில் வைத்து ஸ்பெயின் நாட்டில் இருந்து மொரக்கோ கடத்திய தந்தைக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Ayham Kanaan என்ற 38 வயது நபர் ஒருவருக்கு மொரக்கொ நாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தனது ஒரே மகளுடன் தனியே வாழ்ந்து வந்த Ayham Kanaan அவர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் மற்றும் விசா கிடைத்தது. அவரது மகளுக்கு கிடைக்கவில்லை. தனது ஒரே மகளை தனிமையில் விட்டு செல்ல விரும்பாத Ayham Kanaan, சூட்கேசில் காற்று புகுவதற்கு ஒருசில துளைகள் இட்டு, தனது மகளை அந்த சூட்கேசுக்குள் வைத்து ஸ்பெயின் நாட்டில் இருந்து மொராக்கோ நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்த முடிவு செய்தார்.
ஆனால் காரில் சென்ற அவரை ஸ்பெயின் நாட்டின் எல்லையில் சோதனை செய்தபோது, சூட்கேசுக்குள் அவரது மகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். தனது ஒரே மகளை பிரிய மனம் இல்லாததால், வேறு வழியின்றி இந்த தவறை செய்ததாக அவர் நீதிமன்றத்தில் கூறினார். அவரது தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு கூறியதோடு, அவரது மகளுக்கு சட்டபூர்வமாக பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்க ஸ்பெயின் அரசுக்கு உத்தரவிட்டார்.