ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதைப் போல உறுப்புகளையும் மாற்றலாம்

ht3910-350x250

தமிழகத்தின் டாப்மோஸ்ட் பிரபலங்களின் சிறுநீரக சிறப்பு மருத்துவர். ஆனால், அதற்கான எந்த பெருமையையும் அவரிடம் தேடினாலும் கிடைக்காது. ‘சீக்கிரமாக வந்துவிட்டு, தாமதமாக செல்பவர்’ என்று சக மருத்துவர்களால் பாராட்டப்படும் அளவு தொழிலில் ஈடுபாடு கொண்டவர்.

சிறுநீரகத் துறையில் இப்போது நவீன சிகிச்சைகள் என்னென்ன வந்திருக்கின்றன என்பது பற்றியும், தன்னிடம் சிகிச்சை பெற்றவர்களில் மறக்க முடியாத ஒருவர் பற்றியும் இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘சிறுநீரகம் முற்றிலும் செயல் இழந்துவிட்டால் மாற்று சிறுநீரகம் பொருத்துவதுதான் தீர்வாக இருக்கிறது. இதற்குப் பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் சிறுநீரகத்தை மாற்றாமலேயே சரி செய்ய முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதாவது, பழைய பழுதடைந்த செல்களை மட்டும் அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய ஆரோக்கியமான செல்களை வைத்து சரி செய்ய முயற்சித்து வருகிறார்கள். இதயம், நரம்பு மண்டலங்கள் போன்ற மற்ற உறுப்புகளில் ஸ்டெம் செல் சிகிச்சை நடந்துகொண்டிருந்தாலும், சிறுநீரகத்தில் இப்போது தான் வேகம் பெறுகிறது.

சிறுநீரகம் செயல் இழந்தால் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஒரு செலவு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலின் தாங்கும் சக்திக்காக வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய செலவு என இரண்டு பெரிய செலவுகள் இருக்கின்றன. ஸ்டெம் செல் செலுத்துவதன் மூலம் இவற்றைத் தவிர்க்க முடியுமா என்றும் ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவே தனி பல்கலைக்கழகம் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சிறுநீரகத்துக்கான முதல் பல்கலைக்கழகம் இது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மாற்று சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை என்பதை திசு வளர்ப்பு முறையின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். உறுப்பு தானத்தில் பற்றாக்குறை என்பது எல்லாத் துறைகளிலுமே இருக்கிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக திசு வளர்ப்பு (Tissue culture) முறையின் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இதன்மூலம் ஆய்வகத்திலேயே உறுப்புகளை உருவாக்க முடியும்.

எதிர்காலத்தில் Bioartificial kidney என்கிற இந்த முறையின் மூலம் வாகனங்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதைப் போல சிறுநீரகத்தையே மாற்றிக்கொள்ள முடியும். இது எல்லா உறுப்புகளுக்குமே பொருந்தும். சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்குப் பதிலாக, Wearable Artificial Kidney (WAK) என்கிற செயற்கை சிறுநீரகம் இருக்கிறது. செல்போனை பெல்ட்டில் மாட்டி வைத்துக் கொள்வதைப்போல, இடுப்பில் இந்த WAK சிறுநீரகத்தை மாட்டிக் கொள்ளலாம்.

இதோடு,சிம்பன்சி குரங்கிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மனிதனுக்குப் பயன்படுத்த முடியுமா என்று Genometransplantation என்ற ஆய்வு நடந்து வருகிறது. Home haemodialysis சிகிச்சை முறை இப்போது பரவலாகி வருகிறது. இதன் மூலம் இன்சுலின் ஊசியைத் தானே போட்டுக் கொள்வதைப் போல, வீட்டிலேயே டயாலிசிஸ் எந்திரத்தை வைத்துக்கொண்டு டயாலிசிஸ் செய்துகொள்ளலாம். இதன்மூலம் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு அலைவதைத் தவிர்க்க முடியும்.

தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் வறட்சி, சிறுநீரகக் கல்லை உருவாக்குகிறது என்பது நமக்குத் தெரியும். இந்த Dehydration நாளடைவில் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் காரணமாகிறது என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்படும் காரணம் தெரியாத 15 சதவிகித சிறுநீரகச் செயல் இழப்புகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையே காரணம். எனவே, இந்த Dehydration nephropathy வராமல் தவிர்க்க போதுமான தண்ணீர் அருந்துங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply