கடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறுவதற்குரிய தொகுதிகளை எந்த கட்சியும் பெறாததால், எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதை சபாநாயகர் மட்டுமே முடிவு செய்வார் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெறுவதற்கு ஒரு கட்சி குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.. ஆனால் அகில இந்திய அளவில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே வென்றது. இந்திய அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக 37 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக இருக்கின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சி கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ”நேருவின் ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. இந்திரா காந்தி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் இல்லை. ராஜீவ் காந்தியின் ஆட்சியிலும் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. ஆனால், பாரதிய ஜனதா ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று காங்கிரசார் கூறி வருகின்றனர்.
இது முழுக்க முழுக்க அரசியல் சட்டம் தொடர்பானது. இதில் சபாநாயகர் மட்டுமே இறுதி முடிவு எடுக்க முடியும். சபாநாயகர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சபாநாயகருக்கு என்று சில மரபுகள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், முன்னுதாரணங்கள், வழிகாட்டுதல்கள் இவையெல்லாம். அவற்றின் படிதான் நாம் செல்ல வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
ஆனால் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உடன்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஷகீல் அகமது இன்று கூறுகையில், “காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தராவிட்டால், நாடாளுமன்றத்தை செயல்படவிட மாட்டோம் ” என்று கூறியுளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரதிய ஜனதா, “சபையை நடத்த விடாமல் செய்தால், எப்படி நடத்துவது என்பது எங்களுக்கு தெரியும். இதில் பொது விவாதம் வேண்டாம். இத்தனை மோசமான தோல்வியை சந்தித்தும், அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை அவர்களது விவேகத்துக்கே விட்டு விடுகிறோம்” என்று கூறுகிறது.