சட்டசபையில் அனுமதியின்றி பேசிய பெண் எம்.எல்.ஏவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
சட்டப்பேரவையில் அனுமதியின்றி தொடர்ந்து பேசினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என திமுகவை சேர்ந்த ஜெ.அன்பழகன், காங்கிரஸை சேர்ந்த எஸ்.விஜயதாரணி ஆகியோருக்கு சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார். அப்போது திமுக கொறடா ஆர்.சக்கரபாணி, ‘‘திமுக சார்பில் 24 கவன ஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொடுத்துள்ளோம். அதை விவாதிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார். அவரை அடுத்து பேசிய திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘திமுக கொடுத்துள்ள 24 கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்களில் ஏதாவது ஒன்றை இன்றே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
இவர்களின் இருவரின் கோரிக்கைகளுக்கும் அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால், ‘‘உறுப்பினர்கள் கொடுத்துள்ள கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்கள் அனைத்தும் எனது ஆய்வில் உள்ளன. ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இன்றுகூட ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
அந்த சமயத்தில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் முன்வரிசைக்கு வந்து ஆவேசமாக ஒருசில கருத்துக்களை கூறினார். அவருக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் ஜெ.அன்பழகனை அவரது இருக்கைக்கு திரும்புமாறு பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் தொடர்ந்து முன்வரிசைப் பகுதியில் நின்றுகொண்டு கோஷமிட்டார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ‘‘இதுபோன்று நடந்துகொண்டால் ஜெ.அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’’ என எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது இருக்கையில் அமர்ந்தார்.
இதேபோல் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதாரணி எழுந்து பேச அனுமதி கேட்டார். கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் பதில் கூறியதும் அவருக்கு அனுமதி தரப்பட்டது. அப்போது பேசிய விஜயதாரணி, ‘‘தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ என ஆரம்பித்தார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், தனது அனுமதியின்றி திடீரென பேசக் கூடாது என்றார்.
அதைத் தொடர்ந்து சமூக நலம், சத்துணவு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஜயதாரணி எழுந்து தனக்கு பேச வாய்ப்பு தருமாறு கேட்டார்.
பலமுறை இவ்வாறு அவர் வாய்ப்பு கேட்கவே அதிமுக உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதி குறுக்கிட்டு, ‘‘விஜயதாரணி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பிரச்சினைகள், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது’’ என்று கூறினார்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயதாரணி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘பேரவைத் தலைவரின் அனுமதியின்றி பேசினால் அவைக் குறிப்பில் எதுவும் பதிவாகாது. ஆனாலும் விஜயதாரணி அடிக்கடி அனுமதியின்றி எழுந்து பேசிக் கொண்டிருக்கிறார். இது சரியான முறை அல்ல’’ என்றார்.
அதனைத் தொடர்ந்து, ‘‘இதுபோல நடந்துகொண்டால் விஜயதாரணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’’ என பேரவைத் தலைவர் எச்சரித்தார்.