குறுஞ்செய்தி அனுப்புவதற்காக பயன்படும் ஆண்ட்ராய்டு செயலியான வாட்ஸாப் விரைவில் இலவச வாய்ஸ் காலிங் சேவையை தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. வாட்ஸாப்பில் சில நாட்களாக மாறிவரும் அமைப்புகள் இந்த வாய்ஸ் காலிங் சேவை விரைவில் இடம்பெறுவதற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தற்போது இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியில், குறுஞ்செய்தி, புகைப்படங்கள், சிறிய வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், வாட்ஸ் ஆப் மூலம், தொலைபேசி அழைப்பைப் போல பேச முடியாது. இப்போது அந்த அம்சமும் சேரப்போகிறது எனத் தெரிகிறது. அடுத்து வரப்போகும் வாட்ஸ்ஆப் பதிப்பின் மாதிரி பக்கத்தில் (ஸ்க்ரீன்ஷாட்), வாட்ஸ் ஆப் வழியாக பேசுவதற்கான அழைப்பு வரும்போது, அந்த அழைப்புக்கான எழுத்துகள், மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது என thefusejoplin.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் போலவே ஃபேஸ்புக்கிலும் இலவச அழைப்புக்கான வசதி வருமா என எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் பயன்பாடு 15 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.