ஸ்மார்ட் போன் பிரியர்கள் சந்தித்துக்கொண்டால் தவறாமல் கேட்டுக்கொள்ளும் கேள்வி ”வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியைப் பார்த்தீர்களா?” என்பதுதான். அந்த அளவுக்கு வாட்ஸ் அப் மெசேஜிங் சேவை பிரபலமாக இருக்கிறது. இப்போது வாட்ஸ் அப் , புதிதாக கால் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தச் செய்தி உண்மை என்றால் வாட்ஸ் அப் , இணையம் வழி தொலைபேசி சேவையான ஸ்கைப்பின் கோட்டைக்குள் நுழையத் தயாராகிறது என்று பொருள். நெதர்லாந்தின் தொழில்நுட்ப தளமான ஆண்ட்ராய்டு வேர்ல்டு வாட்ஸ் அப் ஸ்கீர்ன் ஷாட் சோதனைக் காட்சிகளைப் படம் பிடித்து அதன் அடிப்படையில் இந்த புதிய சேவை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் மூலம் போனிலும் பேசலாம் எனும் வசதி அறிமுகமானால் ஸ்மார்ட் போன் பயனாளிகளுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும். ஆனால் செல்போன் நிறுவனங்களுக்கு தலைவலியாக அமையும். ஏற்கனவே இது போன்ற குரல் வழி சேவைகளுக்கு எதிராக செல்போன் நிறுவனங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.